பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

37


தடைப்பட்டது. முஸ்லிம் குடியானவர் ஒருவர் காந்தி மகாத்மாவை எதிர்கொண்டு அழைத்துத் தம்முடைய குடிசைக்கு முன்னால் உட்கார வைத்தார். பாபுஜிக்குப் பழம், மாலை முதலியவற்றைக் கொண்டு உபசாரம் செய்தார். மகாத்மாஜி சுற்றி நின்ற சிறுவர்களுக்கு அந்தப் பழங்களை ஒவ்வொன்றாக விநியோகம் செய்தானதும் குடியானவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். அப்போது அந்த முஸ்லிம் குடியானவர் தம் கையிலே வைத்திருந்த ஒரு சிறு செடியைச் சட்டென்று மகாத்மாவிடம் நீட்டினார். அச் செடியின் ஒரு கிளையில் அகன்று நீண்ட இலைகளும், மற்றொரு கிளையில் சின்னஞ்சிறு வேறு ஜாதி இலைகளும் காணப்பட்டன. ஒரே செடியில் இரண்டு விதமான இலைகள் இருக்கும் அதிசயத்தைக் கண்டதும் சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் பெரும் ஆச்சரியமாயிருந்தது. அதற்குள் அந்த முஸ்லிம் குடியானவரே மகாத்மாஜியிடம் மேற்படி அதிசயத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தார்.

"ஒரே செடியில் இரண்டு ஜாதி இலைகள் வளர்வது எப்படி?" என்று அவர் மகாத்மாவைக் கேள்வி கேட்டார்.