பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

51


வேண்டியதே இல்லை. ஆனால், நல்ல வேளையாக பொதுமக்கள் இத்தனை சிக்கல்களையும் மீறி மகாத்மாஜியின் பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்கு இயற்கையாகவே ஆண்டவன் ஒரு வசதியை அளித்திருக்கிறார்.

வெளியூர்வாசிகளோ, யாராயிருந்தாலும் ரயிலை விட்டு இறங்கியதும் பிரார்த்தனை நடக்கும் இடத்துக்கு எப்படிப் போவது என்று திண்டாடித் தெருவில் நிற்க வேண்டிய அவசியமே கிடையாது. ரயிலை விட்டு இறங்கினதும் அவர்கள் பாட்டுக்குக் கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு நின்ற இடத்திலேயே நின்றால் போதும். பின்னால் அலைமோதிக் கொண்டு வரும் ஜன சமுத்திரமானது அவர்களை அப்படியே முன்னால் தள்ளிக் கொண்டு தன்னால் போய்ச் சேர்த்துவிடும். அப்புறம் கண்களைத் திறந்து பார்த்தார்களானால் தாங்கள் மகாத்மாஜி பிரார்த்தனை நடத்தும் இடத்தில் இருப்பதைக் காண்பார்கள்.

மகாத்மாஜியின் விஜயத்தினால் மாம்பலம் சில தினங்களாகத் தேர்த் திருவிழா பட்டபாடாயிருந்து கொண்டிருந்தது. காப்பி ஒட்டல்களில் கொடுக்கப்படும் காப்பியிலிருந்தே மாம்பலத்தில் கூடும் அன்றாடக் கூட்டத்தின் கணக்கைச் சுலபமாக அறிந்துகொண்டு விடலாம்.

காப்பி கறுப்பு வர்ணமா? சரி, ஐம்பதினாயிரம் பேர்! கொஞ்சம் தண்ணிர் கலந்த வெண்மை நிறமா? எழுபத்தைந்தாயிரம் பேர் நீர் நிறைந்த வெறும் திரவ பதார்த்தமா? சரி, லட்சம் பேர் இப்படியே கணக்கிட்டு விடலாம்.