பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

நவகாளி யாத்திரை


தினசரி பகல் ஒரு மணிக்கெல்லாம், ஜனங்கள் வேங்கடநாராயண ரோடு, தணிகாசலம் செட்டி ரோடு, போக் ரோடு, தியாகராஜா ரோடு ஆகிய எல்லா ரோடுகளின் வழியாகவும் பிரார்த்தனை ஸ்தலத்தை நோக்கித் திரள் திரளாகவும், கும்பல் கும்பலாகவும் போகும் காட்சியானது ஏதோ ஜன வெள்ளம் பெருகும் நதியானது உடைப்பு எடுத்துச் சாலைகளின் இரு கரையும் புரண்டு ஓடுவதைப்போலத் தோன்றுகிறது.

முதல் நாள் பிரார்த்தனைக்குச் சுமார் பதினைந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். பிரார்த்தனைக்கு வரும் கூட்டம் நாளடைவில் பதினைந்தாயிரத்திலிருந்து லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று கணக்கிலடங்காமல் போய்விடவே, பிரார்த்தனையைப் போக் ரோடு மைதானத்திலிருந்து விஜயராகவாச்சாரி ரோடுக்கருகிலுள்ள மாபெரும் வெட்டவெளிக்கு மாற்றும்படி ஆகிவிட்டது.

புதன்கிழமை மாலை பிரார்த்தனைக்குச் சுமார் ஒரு லட்சம் பேர் கூடியிருந்தார்கள். அவ்வளவு ஜனங்களும் மூன்று மணியிலிருந்தே மகாத்மாஜியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து 'வருவார் வருவார்' என்று வழிமேல் விழி வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆயிற்று, மணி நாலு ஆகிவிட்டது. நேரம் ஆக ஆகக் கூட்டத்தின் ஆரவாரம் வர வர அதிகமாகிக் கொண்டே போயிற்று. இந்தச் சமயம் பார்த்து ராஜாஜி மேடை மீது ஏறி வந்தார். ஒலி பெருக்கியின் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு, "எல்லோரும் நிச்சப்தமாயிருக்க வேண்டும். எழுந்து நிற்கக் கூடாது. மகாத்மாஜி