பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

நவகாளி யாத்திரை


வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறார். பஜனையின்போது மத்தளம் வாசிக்கிறார்கள். மத்தள வாத்தியத்துடன் சேர்ந்து எல்லோரும் கை தட்டுகிறார்கள்; பின்னர், 'ராஜா ராம் ராம் ராம், சீதாராம் ராம் ராம்' என்று பஜனை ஆரம்பமாகிறது. கனு காந்தி தாளம் போட்டுக் கொண்டே பாட, பின்னோடு சபையிலுள்ள ஆண் பெண் அனைவரும் கோஷ்டியாகச் சேர்ந்து பாடுகிறார்கள். இந்த அதிசயத்தை ஒரு நிமிஷ நேரம் கண்களை மூடியவாறே கவனித்துக் கொண்டிருந்தேன்.

திடுதிப்பென்று ஏதோ பெருத்த மழை வந்து விட்டதைப் போல் பிரமை ஏற்பட்டது. ஜனங்களின் கைத்தாளமே அவ்வாறு சரத்கால மாரியைப் போல் 'சடசட'வென்று கேட்டது.

மணி ஐந்தரை; அதோ மகாத்மாஜி வந்துவிட்டார். அவ்வளவு பேரும் மகாத்மாஜியின் தெய்வீகத் தோற்றத்தைக் கண்டு மந்திரசக்தியால் கட்டுண்டவர்கள் போல் மெய்ம்மறந்து போய்விட்டார்கள். மகாத்மாஜி நின்றபடியே இரண்டு நிமிஷ நேரம் எல்லோருக்கும் தரிசனம் தந்தார். தியானம், பிரார்த்தனை எல்லாம் முடிந்ததும் காந்திஜி ராம நாமத்தின் மகிமையைப் பற்றி சவிஸ்தாரமாகவும் சாங் கோபாங்கமாகவும் எடுத்துக் கூறினார்.

வெள்ளிக்கிழமையன்று சரியாக மூன்று மணிக்கு த.பா.ஹி.பி. சபையின் வெள்ளி விழா ஆரம்பமாயிற்று. மேற்படி வைபவத்துக்காக மாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்தி பிரசாரகர்கள் வந்திருந்தார்கள். ஹிந்தியை பரப்புவதற்கு