பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

61


"மகாத்மாஜி செளகரியமாகத் தூங்குகிறாரா என்று பார்த்துவிட்டுப் போக வந்தேன். அவர் நிம்மதியாகத் தூங்குகிறார். தாங்கள்தான் கண் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்..." என்று பதில் கூறினேன்.

ராஜாஜி சிரித்துக் கொண்டே, "காந்திஜி தூங்கவில்லை. மணி நாலு ஆகிவிட்டதல்லவா? அதனால் கண்களை மூடிய வண்ணம் காலைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்!" என்றார்.

"ஓகோ என்று சொல்லிவிட்டுத் திரும்பும்போது அங்கே வந்த ஹரிஜன சேவா சங்கக் காரியதரிசி திரு. எல்.என். கோபாலசாமி, "இன்னும் அரை மணி நேரத்தில் வண்டி புறப்படப் போகிறது. ஸ்நானம் செய்கிறவர்கள் செய்யலாம். பிளாட்பாரத்தில் வெந்நீர் தயார்!" என்றார்.

அவ்வளவுதான்; வண்டியிலிருந்த எல்லோரும் அங்கே தயாராயிருந்த வெந்நீரில் ஸ்நானம் செய்து முடித்தோம். பின்னர் வண்டி விழுப்புரம் போய்ச் சேருவதற்கும், கிழக்கே சூரியன் உதயமாவதற்கும், எஸ்.ஐ.ஆர். ஓட்டல் சிப்பந்திகள் எங்களுக்கு இட்லி காப்பி கொண்டு வந்து வைப்பதற்கும் சரியாக இருந்தது. விழுப்புரத்துக்கு அடுத்தபடியாக வண்டி உளுந்தூர்ப் பேட்டை, விருத்தாசலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம், பொன்மலை, திருச்சி, கொடைக்கானல் முதலிய பல ஸ்டேஷன்களில் நின்றது. முக்கால்வாசி ஊர்களில் வண்டியை ஸ்டேஷனை அடுத்த 'லெவல் கிராஸிங்' அருகில் உள்ள மைதானங்களில் நிறுத்தினார்கள். அங்கங்கே கூடியிருந்த ஜனங்களுக்கு மகாத்மாஜி இரண்டு நிமிஷ நேரம் பிரசங்கம் செய்தார்.