பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

நவகாளி யாத்திரை


யோசித்தேன். அதற்கு நேரமில்லை ஆகையால் அகத்திய முனிவரை அனுப்புவதைவிட வர்தா முனிவரையே அந்த இடத்தைவிட்டுக் கிளப்பிவிட்டால் கஷ்டம் தீர்ந்து போகும் என்று கருதி, மகாத்மாஜி உட்கார்ந்து கொண்டிருந்த பக்கம் திரும்பிப் பார்த்தேன்.

இது என்ன கூத்து! மகாத்மாஜி தமது மேல் துண்டை மேடை மீது விரித்துப் படுத்துக் கொண்டிருந்தார்.

"பாபுஜி! கூட்டம் அசாத்தியமாக இருக்கிறது; எழுந்திருங்கள். இல்லாவிட்டால் ஆபத்தாய் முடியும்" என்று நண்பர்கள் சொல்லிப் பார்த்தார்கள்.

மகாத்மா கண் விழித்து, "ஜனங்கள் எல்லோரும் அமைதியாகக் கலைந்த பிறகுதான் நான் எழுந்து வருவேன்" என்று கூறி, மறுபடியும் படுத்துக் கொண்டார்.

அப்புறம் தொண்டர்கள் சிலர் மூங்கில் வாரைகளைக் கொண்டு வந்து நீளவாட்டில் பிடித்துக் கூட்டத்தினரை விலக்கிக்கொண்டே மேடைவரை சென்று, "இதோ வழி போட்டுவிட்டோம். மகாத்மாஜி எழுந்து கீழே இறங்கி வரலாம்" என்று சொன்னார்கள்.

காந்திஜி எழுந்து பார்த்துவிட்டு, "இது பலாத்காரத்தினால் போடப்பட்ட வழி; ஆகையால் நான் வர முடியாது. ஜனங்கள் தாங்களாகவே சாந்தமாகக் கலைந்து மைதானம் காலியானால் ஒழிய நான் எழுந்திருக்க முடியாது" என்று கண்டிப்பாகச் சொல்லி சத்தியாக்கிரகம் செய்தார்.

ஜனங்களோ, மகாத்மாஜி எழுந்து போகும் வரை தாங்கள் மைதானத்தை விட்டு நகருவதில்லை என்று