பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

69


ஆக்கிரமித்திருந்தார்கள்! கோயிலுக்குள்ளே போனால் அங்கேயும் ஜனநாயகம்தான்!

மகாத்மாஜி சரியாக எட்டு மணிக்கு ஆலயத்துக்குள் பிரவேசித்தார். அந்த சுபயோக சுப வேளையில் ஆலாட்ச மணிகள் கணகணவென்று ஒலித்தன. யானைகள் பிளிறின. மேள வாத்தியங்களும், 'ஜே' கோஷங்களும் முழங்கின.

கண்கண்ட தெய்வமான காந்தி மகான் பொற்றாமரைக் குளத்தை வலமாக வந்து, முறையே விநாயகர், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், நடராஜர், சுப்பிரமணியர் முதலிய தெய்வங்களைத் தரிசனம் செய்து தமது பெயரால் அபிஷேக அர்ச்சனைகளும் செய்தார். பின்னர் அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் தரிசனம் அளித்துவிட்டு, கீழே கல் தரையில் செதுக்கப்பட்டிருக்கும் திருமலை நாயக்கரின் சிலையைத் தம்முடைய பாதங்களால் புனிதப்படுத்தினார். (யாத்திரிகர்களின் பாததூளி படவேண்டும் என்பதற்காகவே திருமலை நாயக்கரைக் கீழே தரையிலுள்ள கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்களாம். ஆனால் இன்றைய தினந்தான் அந்தச் சிலை உண்மையாகவே புனிதம் அடைந்திருக்க வேண்டும்.)

இவையெல்லாம் முடிந்ததும் மகாத்மாஜியைக் கல்யாண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேதான் மீனாட்சி அம்மனுக்குச் சொந்தமான ஏராளமான திருஆபரணங்கள் இருந்தன.

"மகாத்மாஜியை அங்கே ஏன் அழைத்துப் போகிறீர்கள்? அவர் பாட்டுக்கு எல்லா நகைகளையும்