பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

79


எல்லாப் பிரதேசங்களையும் வாயு வேகத்தில் சுற்றிப் பார்வையிட்டார்கள்.

பீகார்க் காட்சிகளைக் கண்டு மனம் நொந்த நேரு, "வெறியர்களையும், கொலைகாரர்களையும் அடக்க ஆகாச மார்க்கத்திலிருந்து குண்டு போடவும் தயங்கக் கூடாது" என்று பீகார் சர்க்காருக்கு உத்தரவு போட்டுவிட்டுத் திரும்பினார்.

மகாத்மாஜி கல்கத்தாவில் தங்கியிருந்த சமயந்தான் பீகாரில் பழிவாங்கும் வகுப்பு வெறி ஆரம்பமாயிற்று. இதைப் பற்றி ஜனாப் சுஹர்வர்த்தி மகாத்மாஜியிடம் பிரஸ்தாபித்து, "தாங்கள் நவகாளிக்குச் சென்று அமைதியை நிலைநாட்டுவதைக் காட்டிலும், பீகாருக்குச் சென்று முஸ்லிம் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று யோசனை கூறினார். ஆனாலும் மகாத்மாஜி முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை. பீகாரில் கலவரம் அடங்கவில்லை என்றால் தாம் உண்ணாவிரதம் இருக்க நேரிடும்" என்பதைச் சூசகமாக அறிவித்தார். அவ்வளவு தான்; பீகார் கலவரம் வெகு விரைவில் அடங்கிவிட்டது!

எனவே, நவம்பர் 6-ஆம் தேதி காந்திஜி கல்கத்தாவிலிருந்து நவகாளிக்குப் பயணமானார்.