பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நவராத்திரிப் பரிசு

"ஸரஸ்வதிபூஜை அன்றுதானே அப்படிச் செய்ய வேண்டும்? இன்று சயன அலங்காரம் செய்யலாம்" என்றேன் நான்.

"ஹும். சரி" என்று ஆமோதித்தாள் கௌரி. அன்று பூராவும் மஹிஷாசுரமர்த்தனியை இடுப்பிலே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தாள்.

"அடி அம்மா! அவளிடம் இப்படி அந்தப் பொம்மையைக் கொடுத்திருக்கையே. நாளும் கிழமையுமா உடைச்சு வைக்கப் போறாளே!" என்று எச்சரித்தாள் மகாலட்சுமி.

“நான் ஒண்ணும் உடைக்கமாட்டேன் போ" என்று அம்மாவை விழித்துப்பார்த்தாள் கௌரி.

மறுநாள் அவளிடமிருந்து அந்தப் பொம்மையை வாங்கப்பட்டபாடு தெய்வமறிந்து போயிற்று அவளுக்கே கொடுத்துவிடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். பொம்மை ஒன்றும் பிரமாதமில்லை ஆனால் இறந்த என் அன்னையின் பரிசானதால் அதைக் கொடுக்க எனக்கு மனம் வரவில்லை.

முதல் நாள் கொலு முடிந்ததும் கௌரி என்னிடம் வந்து, "மாமி, நான் ஒன்று கேட்கிறேன் தருவேளோ?" என்றாள்.

"என்ன வேணும் சொல்லு?"

"மஹிஷாசுரமர்த்தனி மாதிரி ஒண்ணு வாங்கிக் கொடுங்களேன். இதைக் கேட்கலை நான். வேறே சின்னதா இருந்தாலும் தேவலை” என்றாள்.

"உனக்கு அந்தப் பொம்மை வாங்கித்தரவேண்டும் என்று போன வருஷமே கடையெல்லாம் தேடிப் பார்த்தேன் கடைக்காரனைக் கேட்டால், 'ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி வரும்; இப்பொழுது இல்லையே' என்று சொல்லிவிட்டான். உனக்கு வேறே ஏதாவது நல்லதாக வாங்கித் தரேன்."

அதற்கு அவள் அவள் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.