பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவராத்திரிப் பரிசு 5

கௌரிக்கு என்னிடம் மிகுந்த விசுவாசம். பொம்மைக்கு அலங்காரம் செய்வதறகுப் பகல் ஒரு மணியில் இருந்தே தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

"என்ன மாமி, பேசாமல் இருக்கேளே. நாழி ஆகலையம்? சாவியைக் கொடுங்கோ. எல்லாவற்றையும் எடுத்து வெளியில் வைக்கிறேன்" என்று நச்சரிப்பாள்.

அவள் தொந்தரவு பொறுக்காமல் சாவியைக் கொடுத்துவிடுவேன். அதை வாங்கிக்கொண்டாவது பேசாமல் இருப்பாளா?

"நீங்களும் வாங்கோ மாமி" என்று என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கூடத்துக்குப் போவாள்.

"இது என்னடி தொந்தரவு?" என்று நான் கடிந்து கொண்டால் கூட - பாவம் அவளுக்குக் கோபமே வருவதில்லை.

"இப்படி நம்மிடம் ஆசையாக இருக்கிறதே இந்தப் பெண். அந்தப் பொம்மையைக் கொடுத்துவிடுவோமே" என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் அம்மாவின் நினைவு வந்தால் அந்த எண்ணம் மறைந்து போகும். 'நல்ல தாக வேறு வாங்கித் தந்தால் போகிறது' என்று நினைப்பேன். மறுநாள் அவளுக்காக இரண்டு பொம்மைகள் வாங்கிக் கொடுத்தேன். முதலில் வாங்கிக்கொண்டு போனவள் சிறிது நேரத்திற்கெல்லாம் அவைகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, "எனக்கு வேண்டாம் மாமி; அம்மா வையறா" என்றாள்.

மகாலட்சுமி அந்த மாதிரி மனுஷி இல்லை. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

நான் மாலையில் மகாலட்சுமியைப் பார்த்ததும், "என்ன மாமி! கெளரியை வைதீர்களாமே. நான் அவ்வளவு செய்யக்கூடாதா அவளுக்கு?” என்றேன்.

"இதென்னடி வெட்கக் கேடு!" என்று ஆச்சரியப்பட்டாள் மாமி.

"நான் ஒண்ணும் சொல்லலையே. பொம்மையைக் கொண்டுவந்தவள் திரும்பவும் எடுத்துக்கொண்டு போய் விட்டாள்."