பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

ரு பத்து வருஷத்துக்குள் தமிழ் இலக்கியத்தில் சிறுகதைக்கு நிரந்தரமான ஸ்தானம் ஏற்பட்டு விட்டது. சிறுகதையின் அமைப்பில் உள்ள ரகசியந்தான் இதற்குக் காரணம் என்று சொல்லவேண்டியதில்லை.

கதை கேட்கும் ஆர்வம், மனிதனுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே இயற்கையாக ஏற்பட்டுள்ள சுபாவங்களில் ஒன்று. கவிதையிலும் தத்துவத்திலும் இருப்பதைவிட, வாசகர்களுக்கு நாவல் படிப்பதில் அதிகமாக உள்ள மோகத்துக்குக் காரணம் இதுதான். நாவல் வாசிப்பதற்குச் சிறிது பொறுமையும் வேண்டும். சிறுகதையோ நம் பொறுமையைக்கூடச் சோதிப்பதில்லை. சுமார் பத்துப் பக்கங்களில், ஆரம்பமும் முடிவும் கொண்ட ஒரு கதையே அடங்கிவிடுகிறது.

சிறுகதை, இலக்கியம் மட்டும் அல்ல. அது கலையுந்தான். சிறுகதையில் வாழ்க்கையே பிரதிபலிக்கிறது. அதன் மூலம் தத்துவ விசாரணை நடத்தலாம். கற்பனையின் சிகரத்தையே எட்டிப் பிடிக்கலாம். கதா சுவாரஸ்யத்தையும் தூண்டலாம்.

நாவலாசிரியனை விடச் சிறுகதை ஆசிரியன் கை தேர்ந்த சிற்பி ஆவான். எழுத்துக்கு எழுத்து, சுவாரஸ்யம் குன்றாமல் கதையை நிர்மாணிக்கக்கூடிய திறமை அவனுக்கு இன்றியமையாதது. சிறுகதையின் ஒவ்வொரு வாக்கியமும் நாவலில் உள்ள ஓர் அத்தியாயத்தைப் போன்றதாகும். கோலமிடும் கை சரசரவென்று பொட்டுக்களை வைத்துக்கொண்டே போகிறது. அடுத்தபடியாகக் கோடுகளை இழுத்துப்