பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புரை பன்மொழிப் புலவர், அறிஞர் கா. அப்பாத்துரையார் கவிஞர் நாரா நாச்சியப்பனைப் பொன் னி பிறை யிதழாக நடந்த காலையிலிருந்து தமிழகம் நன்கறியும். அவர் கவிதையேயன்றிக் கதை கட்டுரைகள் பத்திரிகையுலகில் தல்ல வரவேற்புப் பெற்றுள்ளன. பொன்னியால் வந்த புகழை வளர்த்து மன்னிய புகழாக்கும் எண்ணத்துடன் இள அன்பர்கள் அவர் சிதறிய கவிதை மலர்களைப் பல வண்ணப் பூந்தொடையல்களாக்கித் தமிழகத்துக்குப் படையல் செய்ய விழைந்துள்ளனர். பல்வண்ணத் தொடையல் வரிசையிலே இது பல்சுவைத் தொகுதி. பல் சுவைகளுமே ஒன்றையொன்று வெல் சுவை களாகவே திகழ்கின்றன. மாணவராயிருச்கும் போதே கவிஞர் நாராநாச்சியப்பன் கவிதையில் மழலையாடியதை நான் அறிவேன். இத்தகு மழலைக் கவிதைகள் அன்று தந்த இன்பம் எனக்குப் பெரி தெனினும், இன்று நாரா நாவின் எண்ணக் கவிதைவண்ணக் கவிதையாகக் காணும்போது, என் இன்பம் தமிழகம் பெறும் இன்பக் கடலில் ஒரு துளியாகி அதில் பரவி விடுகிறது! கவிதையில் கனவும், அறிவில் திட்பமும், செயலில் வீறும், புகழில் உலக நலனும் ஒருங்கே வளமாகப் பெற்றுப் பொங்குக தமிழின வாழ்வு! கா. அப்பாத்துரை 10–11–59