பக்கம்:நாடகக் கலை 2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

ஆனால் அப்படியே காப்பியடிக்கக் கூடாது. ஒவ்வொரு நடிகனும் பயிலும் போதே தனக்கென்று ஒரு தனித் தன்மை -ஒரு பாணி ஏற்படுத்திக்கொள்ளுவது நல்லது. காப்பியடிக்கும் இந்தக் கலை நடிப்பில் மட்டுமன்று; பேச்சு, பாட்டு, எல்லாவற்றிலும் இருக்கிறது; பேச முயல்பவர்களெல்லாம் ஒரு சில நல்ல பேச்சாளர்களைப் போலவே பேச முயல்வதைப் பார்க்கிறேன். இதுவும் நல்லதன்று. எப்போதும் எதிலும் தனக்கென்று ஒரு தனித்தன்மையை ஏற்படுத்திக்கொள்ளுவது சிறந்தது.


தோற்றம் ஒன்று; மாறுதல்கள் கோடி

பல கோடி மனிதர்கள் உலகத்தில் வாழுகிறார்கள். ஆனால், ஒருவரைப்போல் மற்றொருவர் இருப்பதில்லை. எல்லோர்க்கும், கால், கை, உடல்தலை, கண், காது, மூக்கு, வாய், எல்லாம் இருக்கின்றன. பொதுவாகப் பார்த்தால் ஒரே தோற்றம்!

ஆராயப் புகுந்தால் எத்தனை எத்தனையோ மாறு பாடுகள்! மனிதனுடைய புறத்தோற்றத்தில் மட்டுமா? அகத் தோற்றத்திலும் ஆயிரம் மாறுதல்கள்.

எல்லோருடைய உருவத்தையும் நாம் பார்க்கலாம். உள்ளே இருக்கும் உள்ளம் நமக்குத் தெரிவதில்லை. அதைத் தெரிந்துகொள்ள அறிவுக் கண் வேண்டும். அந்தக் கண்ணைப் பெற்றவன்தான் நாடகாசிரியன். உங்கள் மனத்தையும் என் மனத்தையும் அவன் அறிவுக் கண்களால் ஊடுருவிப் பார்த்து விடுகிறான்.

சாதாரண மனிதனா அவன்? இல்லை. இல்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/100&oldid=1550649" இலிருந்து மீள்விக்கப்பட்டது