பக்கம்:நாடகக் கலை 2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகங்களையே இவர்கள் முதன்மையாக நடித்து வந்தார்களென்பதும் குறிப்பிடத்தக்கது.

பயில் முறை சபைகள்

பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சுகுண விலாச சபையைப் பின்பற்றி தமிழ் நாட்டில் பயில் முறை நாடக சபைகள் பல தோன்றின. கும்பகோணம் வாணி விலாச சபை, எப்.ஜி. நடேச ஐயர் தொடங்கிய திருச்சி ரசிக ரஞ்சனி சபை, தஞ்சை சுதர்சன சபை, குமர கான சபை, சென்னை செக்ரட்டேரியட் பார்ட்டி முதலிய சபைகளில் சிறந்த அமெச்சூர் நடிகர்கள் பலர் பயிற்சி பெற்று வளர்ந்தார்கள்.

பம்மல் சம்பந்தனாரின் அரிய பணி

பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தொண் ணூற்றுக்கு மேற்பட்ட நாடகங்கள் எழுதியிருக்கிறார். ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். வடமொழியிலுள்ள காளி தாசரின் மாளவிகாக்னிமித்திரம் ஹர்ஷவர்த்தனரின் இரத்தினாவளி முதலிய நாடகங்களையும் மொழி பெயர்த்திருக்கிறார். பம்மல் சம்பந்தனாரின் நாடகங்களிலே கற்பனை நாடகங்களான மனோகரன், இரண்டு நண்பர்கள் போன்ற ஒரு சில நாடகங்கள் உலக நாடகக் கதைகளோடு ஒப்பிடத்தக்கவை என்பதைப் பெருமையோடு குறிப்பிடலாம். இவரது மனோகரன் நாடகத்திற்குச் சங்கரதாஸ் சுவாமிகளும், உடுமலை முத்துசாமிக் கவிராயரும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த நாடகம் சென்ற எழுபது ஆண்டுகளாகத் தமிழ் நாடக மேடையில் அமரத்வம் பெற்ற நாடகமாக விளங்கி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/48&oldid=1540583" இலிருந்து மீள்விக்கப்பட்டது