பக்கம்:நாடகக் கலை 2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. அதனால் எந்த உயர்ந்த நடிகரையும் பார்த்து யாரும் காப்பியடித்து நடிக்கக் கூடாது என்பது என் கருத்து. காப்பியடிப்பது ஒரு தனிக் கலை. அந்தக் கலையைப் பயில் பவர்கள் தமக்கென்று வேறு ஒரு தனித் தன்மையை அமைத்துக் கொள்வது கஷ்டம்.

இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1935-ல் 'மேனகா' படப் பிடிப்புக்காகப் பம்பாய் சென்றிருந்தோம். அந்தப் படத்தின் டைரக்டர் திரு. பி. கே. ராஜா சாண்டோ அவர்கள் மிகச் சிறந்த நடிகர். நான் மேனகாவில் நைனா முகம்மதுவாக நடித்தேன். முதல் நாள் ஒத்திகை நடை பெற்றபோது அவர் நடித்துக் காட்டியபடி அப்படியே நடித்தேன். உடனே அவர் சிரித்துவிட்டார். 'என்னைப் போல் காப்பியடித்து நடிக்காதே, விஷயத்தை மட்டும் புரிந்துகொண்டு உனக்கு வருவதுபோல் நடி; அப்போதுதான் நீ தேர்ச்சி பெற முடியும்' என்றார். அந்தச் சொல் என் நடிப்பை வளர்ப்பதற்கு மிகவும் பயன்பட்டது என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளுகிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் போல் இப்போது திரைப்படங்களிலேயும் நாடகங்களிலேயும் சிலர் நடிக்க முயன்று வருகிறார்கள். அது தவறு. அவர்கள் எவ்வளவுதான் நடித்தாலும் 'சிவாஜி கணேசனைப் போல் நடிக்கிறார்' என்றுதானே சொல்லுவார்கள்? அதில் என்ன புகழிருக்கிறது?

நல்ல நடிகர்களின் நடிப்பைப் பார்க்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு சுவையையும் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/99&oldid=1550648" இலிருந்து மீள்விக்கப்பட்டது