பக்கம்:நாடகத் தமிழ்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பிணையல் என்பது இரட்டைக் கை-இது பதினைந்து வகைத்தாம் என அடியார்க்கு நல்லாரும், பதின்மூன்று வகையென உரையாசிரியரும் கூறியுள்ளார்.

எழிற்கை என்பது அழகு பெறக் காட்டுங் கையாம்.

தொழிற்கை :- என்பது தொழில் பெறக் காட்டுங் கையாம்.

இவைகளைப்பற்றி இன்னும் விரிவாய் அறிய விரும்புவோர் அடியார்க்கு நல்லார் உரையிலும், சுத்தானந்தப் பிரகாசமென்னும் நூலினுள்ளும் கண்டு கொள்க. இவைகளன்றி பொருட்கை என்பது ஒன்றும் கூறப்பட்டிருக்கிறது. இது பொருளுறக் காட்டுங் கையாகும்; அதாவது கவியின் பொருளை விவரித்துக் காட்டும் கையென அறிவோம். 'புறக் கூத்தினிடத்து பிண்டியென்பது பொருட்கையையும் பிணையல் என்பது தொழிற்கையையும் குறிப்பதாகும்.’’ எனவும் கூறியுள்ளார்.

அன்றியும் கூத்து நிகழுங்கால் தாளத்தோடு கூடிய பாட்டும் உடைத்தாயிருப்பது என்பது தெரிகிறது, இவற்றில் அகக்கூத்திற்குரிய தாளங்கள் இன்னின்ன வெனவும் கூறப்பட்டிருக்கிறது.

ஆகவே பூர்வ காலத்தில், தற்காலத்திலிருப்பது போல கூத்து நடக்குங்கால், வாய்ப்பாட்டும், இன்னிசைக் கருவிகளின் வாத்தியமும், தாளமும் உண்டென அறிகிறோம்.

கூத்து நிகழுங்கால் கூத்துப் பிரிவுகளுக்கமைந்த வாக்கியங்களும் உண்டென அறிகிறோம்.

முற்காலத்தில் கூத்து நிகழுங்கால் அது எப்பொழுதும் பாட்டுடனும் அவிநயத்துடனும் கூடியே நிகழ்ந்தது. தற்காலத்தில் உண்டாயிருக்கப்பட்ட கேவலம் வசன நாடகங்கள் அக்காலத்தில் கிடையா. நாடகத் தமிழானது இசைத் தமிழுடன் கூடியே யிருத்தது பூர்வ காலத்தில், தற்காலத்தில் நாடகங்கள் நடக்குங்கால் இசைக் கருவிகளுடனும் வாய்ப்பாட்டுடனுமே சேர்ந்து பெரும்பாலும் நடத்தப்படுகின்றன. ஆதிகாலத்தில் அங்ஙனமே கூத்தானது இசைக்கருவிகளுடனும் வாய்ப்பாட்டுடனும் நிகழ்ந்ததென வறிகிறோம். ஆயினும், இக்காலத்தில் மேல்நாட்டாரிடமிருந்து இத்தேசத்திற்கு வந்த ஹார்மோனியம், பிடில் முதலிய இசைக் கருவிகள் அக்காலத்திற் கிடையா. பெரும்பாலும் தமிழ் நாட்டிற்கே உரிய யாழும் குழலும் இசைக் கருவிகளாக உபயோகிக்கப்பட்டன. வாய்ப்பாட்டென்பதை நமது முன்னோர் மிடற்றுப் பாட்டு எனக் கூறியுள்ளார். அன்றியும் பாடுங்கால் கால நிர்ணயத்தைக் குறிக்கும் பொருட்டு மத்தளம் என்னும் தண்ணுமைக் கருவி உபயோகிக்கப்பட்டதென வறிகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/24&oldid=1287614" இலிருந்து மீள்விக்கப்பட்டது