பக்கம்:நாடகத் தமிழ்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

முழவுகளின் வகைகளைப் பற்றி சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் உரையில் விரித்துரைத்திருப்பதைக் கண்டு கொள்க.

இனி நாடகமேடை என்று வழங்கும் ஆடரங்கைப் பற்றி நமது முன்னோர் கூறியுள்ளதைப்பற்றிக் கருதுவோம். இதற்கு முற்காலத்தில் தலைக்கோற்றானம் என்கிற பெயர் உண்டு. இப்பெயர் வந்ததற்குக் காரணம், பின் விவரித்துக் கூறப்போகிற தலைக்கோல் வைக்கப்பட்ட இடமாதலால்.

முதலில் சிற்ப நூலாசிரியர்கள் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை நாடக மேடை செய்ததற்கு நிலக்குற்றங்கள் நீங்கினயிடத்திலே நிலம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இன்னின்ன நிலங்கள் இதற்குத் தகாதன இன்னின்ன நிலங்கள் தக்கனவென்பதை மேற்கூறிய நூல்களில் விவரமாய்க் கண்டு கொள்க, அன்றியும் கூத்துமேடையானது ஊரின் மத்தியில் இருக்கவேண்டுமென்றும், தேரோடும் வீதிகளுக்கு எதிர்முகமாக இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இங்ஙனம் கூறியதால் நாடக மேடையானது ஊரிலுள்ள ஜனங்களெல்லாம் வந்து சேர்வதற்கு சவுகர்யமாயிருக்க வேண்டுமென்றும், பெரிய வீதிகளிற் போகும் ஜனங்களுடைய மனத்தைக் கவரும்படியான ஸ்தானத்தில் இருக்கவேண்டும் என்றும் நமது பூர்வீகர்கள் கருதினர்களெனக் கண்டறிகிறோம். உதயணன் கதையாகிய பெருங்கதையில் வத்தல காண்டத்தில் விரிசிகை வரவு குறித்த பாகத்தில் 'கூத்தாடிடமும் கொழுஞ்சுதைக்குன்றமும்” என்று குறிப்பித்திருப்பது கவனிக்கற்பாலது. அன்றியும் அவ்வரிய நூலில் உஞ்சைக் காண்டத்தில் விழாக் கொண்டது எனும் பிரிவில் வாயிற் கூத்தும் சேரிப்பாடலுங், கோயி நாடகக் குழுக்களும்” என்று கூறப்பட்டிருப்பதும் காண்க. நாடக சாலையானது இன்னின்ன இடங்களில் இருக்கக்கூடாது எனவும் கூறப்பட்டிருக்கிறது; அவை தெய்வத்தானம், அறவோர் பள்ளி, செருப்புகுமிடம், சேரி, யானைகளிருக்குமிடம், குதிரைச்சாலை, பாம்புப் புற்று நிறைந்த இடம் முதலியனவாம்.

"ஆடலும் பாடலும் கொட்டும் பாணியும்
நாடியபாங்கு சமைக்குங் காலத்
தேவர் குழாமுஞ் செபித்தபள்ளியும்
புள்ளின் சேக்கையும், புற்று நீங்கிப்
போர்க்களியானைப் புரை சாராது
மாவிற்பந்தியொடு மயங்கல் செய்யாது
செருப்புகுமிடமுஞ் சேரியு நீங்கி...”

என்று ஒரு பழைய நூலில் கூறப்பட்டிருப்பது காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/25&oldid=1287616" இலிருந்து மீள்விக்கப்பட்டது