பக்கம்:நாடகத் தமிழ்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

நீரைப் பொற்குடத்திலே எடுத்துக்கொண்டு வந்து இத்தலைக்கோலே அபிஷேகம் பண்ணுவது வழக்கமாம். வேத்தியலில் வென்றிக் கூத்துக்கு இது மிகவும் பொருந்தியதாக இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இனிகூத்து நிகழுங்கால் முற்காலத்திருந்த சில வழக்கங்களைப் பற்றி ஆராய்வோம். நாடகக்கணிகை ஆடரங்கமேறுங்கால் வலக்கால் முன்வைத்து ஏறுகிற வழக்கொன்றுண்டென அறிகிறோம், இப்பொழுதும் தெய்வ பக்தியுள்ள புதிதாய் நாடக மேடையின் மீது ஏறும் நாடக பாத்திரங்கள் வலக்கால் முன்வைத்தேறுகின்றனர் என்பதை நான் அறிவேன். இது லட்சுமீகரம் என்று சொல்லுவார்கள். இப்படி வலக்கால் வைத்து அரங்கமேறிய நாடகமாது பொருமுகவெழினிக்கு நிலையிடனாக உள்ள வலப்பக்கத் தூணிடத்தே சேர்தலும் பூர்வ வழக்கமாம். அன்றியும் ஒவ்வொரு நடனும் அரங்கத்தில் முதலில் தோன்றும்போது ஒரு பாட்டைப்பாடும் வழக்கம் முற்காலத்திலுண்டு. இதற்கு 'தோற்றக்கவி அல்லது தோற்றத்தரு’ என்று பெயர். தரு என்றால் நாடகப்பாட்டைக் குறிப்பதாம்.

தோரிய மடந்தையர் (தோரியம்= கூத்து) என்னும் ஆடி முதிர்ந்தார் இடதுபக்கம் உள்ள ஒருமுகவெழினிடம் சேர்ந்திருத்தல் வழக்கமெனவும் அறிகிறோம், கூத்தாடுவதில் தேர்ந்த அரிவை யொருத்தி, வயதுசென்றமையால் அங்ஙனம் ஆட தேகசக்தி குன்றினவளாய், ஆடுதற்குச் சக்திவாய்ந்த இளையாள் ஒருத்தி அங்ஙனம் ஆட, அதைக் கண்ணுற்று ஆடுங்கால் குற்றம் ஏதேனும் நிகழ்ந்ததேல், அதனேக் கூறி அகற்றுதற்கும், குற்றமின்றி ஆடுங்கால் அதைக் கூறிப்புகழ்ந்து உற்சாகப்படுத்துவதற்கும், அரங்கத்தின் ஒருபுறமாக நிற்பது வழக்கம்போலும். தற்காலத்தும் வயது முதிர்ந்த நாடகமாடுவதிற்றேர்ந்தவர்கள் பக்கத்திரையின் பக்கத்திலிருந்து வயதுடை நாடக பாத்திரங்களை உற்சாகப்படுத்துகிற வழக்கமுண்டென்பது இங்கு கவனிக்கத்தக்கது: வாரம் பாடும் தோரியமடந்தை" என்பதற்கு வாரம் பாட்டினைப்பாடும் தோரிய மடந்தை' யெனக்கூறி, ஆடி முதிர்ந்த பின்பு, பாடன் மகளாய் ஆடன் மகளின் காலுக்கு ஒத்தளத்துப் பாடுங்கால் இடத்துரண் சேர்ந்தியலுமவள்', என்று உரை எழுதியிருக்கிறார்,

அன்றியும் கூத்து நிகழுங்கால், ஆடுவார்க்கு இடமும், பாடுவார்க்கு இடமும், ஆட்டிவைக்கும் ஆசிரியர்களுக்கு இடமும் இசைக் கருவியாளருக்கு இடமும் பிரத்யேகமாகக் குறிப்பிட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/29&oldid=1287620" இலிருந்து மீள்விக்கப்பட்டது