பக்கம்:நாடகத் தமிழ்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தற்காலத்திலிருப்பது போலவே முற்காலத்திலும் நாடக ஆரம்பத்தின் முன் தெய்வ வணக்கமான பாடல்கள் பாடப்பட்டனவென அறிகிறோம். இதற்கு அரங்கபூசை என்றும் பெயர். அப் பாடல்கள் நன்மையுண்டாவும் தீமை நீங்கவும் பாடப்பட்டன. இப் பாட்டுகள் தேவர்களைத் துதித்தலால் தேவபாணி எனும் பெயர் கொண்டன. நாடகத் தமிழில் தேவபாணியானது பெருந்தேவபாணியென்றும் சிறு தேவபாணியென்றும் இருவகைத்தாயிருந்தது. பெருந்தேவபாணி பல தேவரைத் துதிப்பதாம்; சிறு தேவபாணி வருணப்பூதரைத் துதிப்பதாம். பல தேவர் வெள்ளிய வளயலைப் போன்ற நிறத்தையுடைய வெள்ளைமூர்த்தி என்று கூறப்பட்டிருக்கிறது, அன்றியும் மாயோற்பானி என்பதும் ஒரு வகைத்தாம். இது முற்கூறிய பதினோராடற்கும் முகநிலையாகிய தேவபாணியாம். பெரும் தேவபாணியும் சிறு தேவபாணியும் மூவடி முக்கால் வெண்பாவால் இயற்றப்பட்டது. இங்கு பிற்காலத்திலும் தற்காலத்திலும் தமிழ் நாடகங்கள் ஆரம்பிக்குமுன் விக்நேஸ்வரர் துதி சரஸ்வதி துதி முதலியன செய்யும் வழக்கமானது பூர்வகாலத்தில் இல்லையென்பது கவனிக்கத்தக்கது.

இன்னும் பூர்வகாலத்தில் ஒவ்வொரு கூத்தும் நிகழும்பொழுது அதற்குரிய நடையுடை பாவனைகளுடன் நடத்தப்பட்டது என்று அறிகிறோம். மாதவி பதினோராடல் ஆடியபொழுது அவ்வவ்வாடலுக்குத் தக்க கோலமும் கொண்டாள் என்பதனாற் காண்க. அன்றியும் நாடகங்களில் ஸ்திரீகள் ஆண் மக்கள் வேடம் புனைவதும் ஆண்மக்கள் ஸ்திரீ அல்லது பேடி வேஷம் புனைவதும் தற்காலத்தைப்போல் அக்காலத்திலும் உண்டென அறிகிறோம். ஆண் சோடின என்றால் ஆண் வேடத்திற்குரிய அலங்காரமாம். சோடின என்றால் நாடக வேஷம் அல்லது அலங்காரம் நன்றாய் ஆடிய நாடகக் கணிகைக்கு அரசன் வழங்கும் பரிசு ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் எனக் கூறப்பட்டிருக்கிறது.

நாடக ஆரம்பத்தின்முன் அந்தரக் கொட்டு என்னும் ஓர் வகைக் கூத்தாடுவது வழக்கமெனச் சிலப்பதிகாரத்தினின்றும் அறிகிறோம். இது ஜனங்களின் மனதை முன்பு ரமிக்கச்செய்யும் பொருட்டு போலும். முற்காலத்தில் கூத்தாடிகள் நகைகளைப் பிறரிடமிருந்து இரவல் வாங்கிப் புனைவது வழக்கம் என அறிகிறோம். மணிமேகலையில் "ஆடுகூத்தர் அணியைபோல, வேற்றோர் அனியொடுவந்தீரோ" வெனக கூறியிருப்பதைக் காண்க.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/30&oldid=1287736" இலிருந்து மீள்விக்கப்பட்டது