பக்கம்:நாடகத் தமிழ்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

திருக்குறள், மணிமேகலை, ஜீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு முதலிய சில கிரந்தங்கள் நசியாமலிருக்க, தமிழ் நாடகங்கள் காலங்களில் இருந்தனவாயின், அவை மாத்திரம் நசித்துப் போவானேன்? என்பதாம். யோசிக்குமிடத்து, இதற்குப் பதில் பின்வருமாறு இருக்கலாமெனத் தோற்றுகிறது. தமிழ்ப் புஸ்தகங்களெல்லாம் பூர்வகாலத்தில் ஓலையிலே எழுதப்பட்டனவென்று குறித்தோம். அவைகள் நசிக்கா திருக்கும்படிக் காப்பாற்ற ஒரு முக்கியமான மார்க்கம், ஓலை பழுதாய் ஒரு கிரந்தம் அழிந்துபோகுமுன் அதைப் பெயர்த்து வேறொரு புதிய ஒலைப் புஸ்தகத்தில் எழுதுவதேயாம். சமஸ்கிரதத்தில் வேதமானது அநேக ஆயிரம் வருடங்களாக பரம்பரையாய் மனனம் செய்யப்பட்டு ஒப்புவிக்கப்பட்டு அழியாமல் வந்ததுபோல், தமிழ் நூல்கள் அவ்வாறு மனனம் செய்யப்பட்டு வந்தன என்று எண்ணுவதற்கு ஆதாரம் யாதொன்றுமில்லை. தமிழ் நாடெங்கும் அநேக நூற்றாண்டுகளாக வேறு வேறு அரசுகள் மாறி மாறி வந்ததினாலும், யுத்தங்களினால், உண்டான குழப்பங்களினாலும், தமிழ் பாஷயை ஆதரிப்பார் குன்றிக்கொண்டே வந்தனர் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையே. அப்படிப்பட்ட காலங்களில் சிறுவர்களுக்கு இன்றியமையாக் கல்வி பயிற்றுவிக்க வேண்டிய நீதிமொழிப் புஸ்தகங்களும், மத சம்பந்தமான புஸ்தகங்களும், இன்னும் மிகவும் சிரேஷ்டமெனக் கருதப்படும் சில நூல்களும் தவிர, மற்ற நூல்களைப் படிப்பவர் மிகவும் சிலரே ஆவர்; இசை நூல்களும் நாடக நூல்களும் இல்வாழ்க்கைக்கு இன்றியமையாதனதல்ல; ஒரு தேசமானது சுபிக்ஷமாய் சண்டைச் சச்சரவின்றி யிருக்குங் காலத்தில்தான் அத்தகைய நூல்கள் விர்த்தியடையத் தக்கன. இவ்வுண்மை எல்லா தேசத்து சரித்திரங்களினாலும் அறியலாம். ஆகவே அநேகம் நூற்றாண்டுகளாக மேற்சொல்லிய காரணங்களினால் இசை நூல்களையும் நாடக நூல்களையும் கற்பார் மிகச் சிறியதாகவே இருந்திருக்க வேண்டும்; அவைகளைப் பாதுகாக்க வேண்டி, பழைய பிரதிகளினின்றும், புதுப்பிரதிகளுக்குப் பெயர்த்தெழுதும் கஷ்டத்தை மேற்கொள்வார் அதனிலும் சிறிதாகவிருக்க வேண்டுமென்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. ஜீவக் சிந்தாமணி போன்ற ஒரு பெரிய நூலை, பழைய ஓலைப் புஸ்தகத்தினின்றும், புதிய ஓலைப் புஸ்தகத்திற்குப் பெயர்த்து எழுத்தாணி கொண்டு ஒருவன் எழுதப்புகின் அதனுடைய கஷ்டம் அப்பொழுது தான் தெரியும். இதன் அருமையைத் தெரிந்தே ஆதிகால முதல், அச்சுப் புஸ்தகங்கள் நடமாட ஆரம்பித்த காலம் வரையிலும் தமிழ்ப் புஸ்தங்களை நம் முன்னோர் பயபக்கியுடன் பூசித்து வந்தனர் என்பது திண்ணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/35&oldid=1287737" இலிருந்து மீள்விக்கப்பட்டது