பக்கம்:நாடகத் தமிழ்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

இதைச் சேர்க்கவேண்டும், இதை இசைப்பாட்டெனவே கூறவேண்டும். நாடக லட்சனங்கள் இதில் ஒன்றையும் காணோம். இது பாடப்பட்டிருக்கலாமேயொழிய ஆடப்பட்டிருக்க மாட்டாது. எனது சிறு வயதில் பெண்கள் இதை இசையுடன் பாடியதைக் கேட்டிருக்கிறேன்.

(12) துரௌபதி துகிலுரிதல் நாடகம்: இது பாரதக் கதையை ஒட்டியது.

(13) துளசிதாசர் நாடகம் : துளசிதாசரது சரித்திரத்தை நாடக ரூபமாய்க் கூறுவதாம்.

(14) மன்மத நாடகம் : இதற்கு மற்றொரு பெயர் ரதி புலம்பல்.

(15) மைராவண நாடகம் : தற்காலத்தில் பாகவதர்கள் மயில் ராவணன் கதை என்று சொல்லுகிற கதையை நாடக ரூபமாக உடையது. சமஸ்கிருதத்தில் 'மைராவணன்' என்றே கூறப்பட்டிருக்கிறது. இப்பெயர் மருவி மயில் ராவணன் என்று வழங்கியிருக்கலாம் எனத் தோற்றுகிறது.

(16) பாராங்குச நாடகம் : இது வைஷ்ணவ மதாசாரியர்களுள் ஒருவராகிய நம்மாழ்வார் சரித்திரத்தை கூறுவது. இதை இயற்றியவர் ஸ்ரீரங்கத்து கந்தாடை அண்ணன் என்பவருடைய சிஷ்யராகிய சேஷக்கவி என்பவர். இதில் தோடயமானது சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் கூறப்பட்டிருக்கிறது. தோடயத்துக் கப்புறம் மங்களம் எழுதப்பட்டிருக்கிறது. ஆயினும் நாடகங்களுக்குரிய மற்ற இலட்சணங்கள் இல்லாதிருக்கிறபடியால் இதை இசைப் பாட்டின் பகுதியிலேயே சேர்க்கவேண்டும்.

(17) சீங்கீஸ்வர ஸ்வாமியார் பாரிஜாத நாடகம்: இதை இயற்றியவர் பொன்னையா என்பவரின் புத்திரரான குமாரஸ்வாமி என்பவர். இதில் வசனத்தைக் கூறுமிடத்து, சபா வசனம் என்றும் பொது வசனம் என்றும் இரண்டு பிரிவுகளைக் காட்டியிருக்கிறது.

மேற்குறிப்பிட்டவைகள் அன்றி, ராஜகோபாலன் என்பவர் இயற்றிய சுக்கிரீவ விஜயம் எனும் நாடகமும், குமரபிள்ளை என்பவர் எழுதிய வள்ளியம்மை நாடகம் என்பதும், சுப்பிரமணிய விலாசம் அல்லது சுப்பரா விலாசம் என்பதும் இப் புஸ்தகசாலையில் இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/59&oldid=1290154" இலிருந்து மீள்விக்கப்பட்டது