பக்கம்:நாடகத் தமிழ்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தமிழ் நாடகங்களைக் குறித்துக் கருதுமிடத்து ஒரு முக்கியமான வருஷமாக எண்ணத்தக்க 1891 வருஷம் முதல், அநேக தமிழ் அபிமானிகள், தமிழ் மடந்தை நாடகம் எனும் சிறந்த மணியில்லாக் குறையைத் தீர்ப்பதற்கு ஏற்பட்டு தமிழ் நாடகங்களை இயற்றியுள்ளார். அவர்களுள் முற்பட்டவராக காலஞ்சென்ற எனது நண்பரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றவருமான, 'பரிதி மால் கலைஞன்” எனும் பெயர் பூண்ட, வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியாரைக் கூறல் வேண்டும். இவர் முதல் முதல் தமிழில் எழுதிய நாடகம் ரூபாவதி என்பதாம். பின்னர் கலாவதி என்பதை இயற்றினார். இவை இரண்டும் வசன நடையிலமைந்த நாடகங்கள். ஆங்காங்கு சில விருத்தங்கள் முதலியன உடையவை, பிறகு மானவிஜயம் எனும் நாடகத்தை எழுதினர். இது வசனமாயில்லாது அகவற்பாவால் அமைந்ததாம். கடைசியிற் கண்ட நாடகமானது ரங்கத்தின்மீது ஆடப்பட்டதாக எனக்கு ஞாபகமில்லை. ஆடுவதும் கொஞ்சம் கடினமென்றே கூறவேண்டும். மேற்கூறிய நாடகங்களை இயற்றியது மன்றி, தற்காலத்தில் நாடகத் தமிழுக்கு சூத்திரங்கள் இல்லாக் குறையைத் தவிர்க்கவேண்டி, தனது நுண்ணறிவைக்கொண்டு நாடகவியல் எனும் இலக்கண நூலையும் இயற்றினர். இவரிடத்திருந்த ஒரு அரிய குணம் என்னவெனில், தமிழ் பாஷைக்காகத்தான் உழைத்தது மன்றி,தன்னைச் சுற்றிலும் அநேகம் தமிழ் மாணவர்களைச் சேர்த்து அவர்களெல்லாம் மிகவும் ஊக்கத்துடன். உழைக்கும்படி அவர்களுக்கு உற்சாகம் உண்டாக்கியதேயாம். இப்படி அவரால் ஊக்கம் ஊட்டப்பட்ட அநேகம் தமிழ் மாணவர், பிற்காலம் தமிழில் பல நாடகங்களை இயற்றியிருக்கின்றனர். இவர் சிறு வயதிலேயே பரலோகஞ் சென்றது தமிழ் உலகத்தார் செய்த அபாக்கியமேயாம்! இக்காலத்தில் வெளிவந்த தமிழ் நாடகங்களுட் சில பெரும்பாலும் சம்ஸ்கிருத கவிகளாகிய காளிதாசர் பவபூதி முதலியோருடைய வழியைத் தழுவியும், பல ஷேக்ஸ்பியர் மஹாகவியின் வழியைத் தழுவியும் உள்ளன என்று முன்பே கூறினேன். தமிழ் மாணவர்கள் சர்வகலாசாலையில் பி.ஏ. முதலிய பட்டங்கள் பெறுவதற்கு சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படிக்காமற்போக முடியாது. உலகெங்கும் பெயர்பெற்ற அந்த நாடகக்கவியின் நோக்கங்களும், நாடகம் எழுதும் துறைகளும், நாடக பாத்திரங்களின் குணங்களை வெளிப்படுத்தும் திறனும், சந்தர்ப்பங்களால் அந்நாடக பாத்திரங்களின் குணங்கள் மாறும் வகையும், தமிழ் மாணவர்களுக்கு ஒரு பெரும் உற்சாகத்தையுண்டு பண்ணின என்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. ஷேக்ஸ்பியர் மஹா நாடகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/68&oldid=1290224" இலிருந்து மீள்விக்கப்பட்டது