பக்கம்:நாடகத் தமிழ்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

ஐயமில்லை. இதல்லாமல் பட்டண வாசிகளில் அநேகர் இத்தெருக்கூத்துக்களைப் பார்த்திருக்கமாட்டார்கள். இத்தகைய காரணங்களால் நமது தமிழ் நாட்டில் அநேக வருடங்களுக்குமுன் ஓர் கிராமத்தில் நடந்த தெருக்கூத்து ஒன்றின் விவரங்களை எடுத்துரைக்கின்றேன்.


இரவு ஒன்பது மணிக்கு இன்ன கூத்து இன்ன இடத்தில் நடக்கப்போகிறதென கிராம வெட்டியான் காலையிலே தமுக்கடித்துக் கொண்டு போனான். கிராம வீதிகளிலெல்லாம் சாயங்காலம் இருட்டுமுன் நாடகம் நடக்கும் இடத்தைச்சுற்றி கிராமத்திற்குரிய பட்சணக்கடைகள் ஏற்படுத்தப்பட்டன; இருட்டியவுடன் ஜனங்கள் ஒவ்வொருவராக வந்துசேர்ந்தனர். எல்லோரும் அவரவர்கள் அந்தஸ்துக்குக் தக்கபடி உட்கார்ந்தனர். கொஞ்சம் பணக்காரராயிருப்பவர்கள் பாய் தலையணை கொண்டுவந்து பாயைப்பரப்பி அதன் மீது உட்கார்ந்துகொண்டனர். கூத்து நடக்க ஏற்பட்ட இடம் நான் தங்கியிருந்த பெரிய மனிதருடைய வீட்டிற்கு அருகாமையிலிருந்தபடியால், நான் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தேன். இதற்குள்ளாக ஒரு பக்கமாக இருந்த பாழடைந்த சுவற்றிற்குப்பின் நாடகமாடுபவர்கள் வந்து சேர்ந்து வேஷம் கட்டிக்கொண்டிருந்தார்கள். நாம் சாதாரணமாக வேஷதாரிகள் வேஷம் போட்டுக்கொண்டிருந்தார்கள் என்று சொல்லுவோம்; கிராமங்களில் வேஷம் கட்டுதல் என்றுதான் உபயோகிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் வேஷதாரிகள் தரிக்கும் வேஷத்தைப் பற்றி பிறகு நான் கூறுவதைப் படிப்பின் தெரியும். பிறகு ஒன்பது மணியாகிவிட்டதென்று நான் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரும் என்னைக் கூத்துப்பார்க்க வரவழைத்தவருமான எனது நண்பரை, கூத்துபார்க்கவேண்டுமென வற்புறுத்தினேன். அவர் என்ன சொல்லியும் கேளாமல், அவரையும் அழைத்துக்கொண்டு ஒன்பது மணிக்கெல்லாம் சரியாக எங்களுக்கென்று ஓரிடத்தில் போட்டிருந்த நாற்காலிகளில் போய் உட்கார்த்தோம். அரை மணி யாச்சுது ஒருமணியாச்சுது, இரண்டுமணி ஆச்சுது! கூத்து ஆரம்பத்தையே காணோம் என்ன சமாசாரம் என்று மெல்ல என் நண்பரை வினவ அவர் 'ஒன்பது மணியென்றால் பத்து பதினொரு மணிக்குத்தான் ஆரம்பம் செய்வார்கள். நான் இதற்காகத்தான் பொறுத்துப் போகலாமென்று சொன்னேன்' என்றார், அன்றியும் கிராமவாசிகளான எல்லா பெரிய மனிதர்களும் வந்து சேர்ந்த பின் தான் ஆரம்பிப்பார்கள் என்று சொன்னார். அப்படியே பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/75&oldid=1291618" இலிருந்து மீள்விக்கப்பட்டது