பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாக்கம் இராசரத்தின முதலியார் ஆவார். பம்மல் சம்பந்தனாரும் அவருடைய நாடகக் குழுவைச் சார்ந்தவர்களும் இராசரத்தினம் அவர்களைச் சந்தித்து, தங்களுடைய நாடகக் குழு வளர நிதி உதவி வழங்கும்படி கேட்டு கொண்டனர். திரு. இராசரத்தினம் “ இதுபோன்ற நாடகக் குழுவால் நாட்டிற்கு என்ன பயன்?” என்று கேட்டார். பம்மல் சம்பந்தனார், அதற்குப் பதில் ‘சேக்சுபியர் மகா கவியைக் கேளுங்கள்’ என்று கூறினார். அதன்பின் இராசரத்தினம் ‘சேக்சுபியர் இங்கிலாந்தைச் சார்ந்தவர். அப்படிப்பட்ட நாடக ஆசிரியர் நம் நாட்டில் யார் இருக்கிறார்கள்?’ என்று கேட்டார். பம்மல் சம்பந்தனார் ‘இன்று இல்லாவிட்டாலும் இனிமேல் அவர் போன்ற நாடக ஆசிரியர்கள் நம் நாட்டில் பிறப்பார்கள்’ என்று உறுதியாகப் பதில் அளித்தார்.

பம்மல் சம்பந்தனார் தமிழ் நாடகங்களின்மேல் கொண்டிருந்த ஈடுபாட்டையும், நம்பிக்கையையும் இந் நூலில் காணலாம்.

‘சுகுண விலாச சபா’ என்ற நாடக அமைப்பைச் சென்னையில் உருவாக்கிய பின்னர், இந் நாடகக் குழுவைப் பின்பற்றித் தமிழகத்தில் புதிய நாடகக் குழுக்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று 'ஓரியன்டல் டிராமேட்டிக் சொசைட்டி' என்பதாகும். இந் நாடகக் குழு சுகுண விலாச சபா தோன்றுவதற்கு முன்னரே உருவாகி, பின்னர்ச் செயலற்று விட்டது. சுகுண விலாச சபாவுக்குப் பின் மீண்டும் செயல்படத் தொடங்கியது. ‘ஓரியன்டல் டிராமேட்டிக் சொசைட்டி’ என்ற இந் நாடகக் குழுவில் பார்ப்பனர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இந் நாடகக் குழுவினர் பிற சாதியினரைச் சேர்ப்பதில்லை. மேலும் அந் நாடகக் குழு சுகுண விலாச சபையில் நடிகராக இருந்த ரங்கசாமி அய்யங்காரை அவர் பார்ப்பனாராக இருந்ததால் அவர்களுடைய குழுவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

சாதி சமய பேதங்களைக் கடந்த பம்மல் சம்பந்தனார், நாடகக் கலையை வளர்க்கத் தோன்றிய அந் நாடகக்குழு சாதியைப் பாதுகாக்கும் அரணாக மாறியதைக் கண்டு வெகுண்டார். அந் நாடகக் குழுவைக் கடுமையாக இந் நூலில் சாடியுள்ளார்.

அன்றைய தமிழ் நாடகங்களில் உண்மைக்கு மாறாகப் பொருந்தாத நிலையில் உரையாடல்களும், நிகழ்வுகளும் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாக அரசன் அவைக்கு வந்தவுடன் அமைச்சரைப் பார்த்து, “மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? பிராமணர்கள் யாகம் செய்கிறார்களா? சத்திரியர்கள் சரியாகச் சண்டை போடுகிறார்களா? சூத்திரர்கள் வேலை செய்கிறார்களா?” என்று கேட்க, அமைச்சர் அரசனின் ஒவ்வொரு கேள்விக்கும் ஆமாம் என்று பதில் கூறுவார்.

இந் நாடக உரையாடலைக் கேட்ட பம்மல் சம்பந்தனார், இந்த அரசன் ஊரில் மழை பெய்வதைக்கூட அறியாமல் அந்தப்புரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தானா? என்று கூறி நகைத்ததாக இந் நூலில் குறிப்பிட்டுள்ளார்.