பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

நாடக மேடை நினைவுகள்


நினைக்கும்போதும், தமிழில் ஏதாவது எழுதும்போதும், அவரது அடி பணிந்து வரும், பிரம்மஸ்ரீ வே. சாமிநாத அய்யர் எனக்கனுப்பிய சாற்றுக் கவியேயாம். இதை அந்நூலின் முகப்பில் அச்சிட்ட சாற்றுக் கவிகளில், முதலாகவே அமைத்துள்ளேன். என் மனத்திலும் அங்ஙனமே அமைத்துள்ளேன். இவருக்கு நான் செய்யத்தக்க கைம்மாறு ஒன்றுதான் இருக்கிறது. அதாவது, இவருக்கு இவர் மேற் கொண்ட பழைய தமிழ் நூல்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் இச்சையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அவரது ஆத்மதெய்வமாகிய ஸ்ரீ தியாகராஜப் பெருமான் இன்னும் பல்லாண்டு ஆயுளையும் தேகாரோக்கியத்தையும் கொடுப்பாராக என்று பிரர்த்திப்பதேயாம்.

மேற்சொன்ன சாற்றுக்கவிகளின்றி, சென்னை கலா சங்கத்தில் முதல் முதல் பி.ஏ. பட்டம் பெற்ற, “இலக்கண விளக்கம்” முதலிய அரிய பெரிய நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்திய ராவ்பஹதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களும் “மனோன்மணீயம்” என்னும் சிறந்த நாடகத்தைத் தமிழில் இயற்றிய, ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் விற்பன்னராகி தமிழ் மாது செய்த தௌர்ப்பாக்கியத்தினால் குறைந்த வயதிலேயே இறைவனடி சேர்ந்த திருவனந்தபுரம் சுந்தரம் பிள்ளை அவர்களும், இன்னும் சிலரும், ஆங்கிலத்தில் நற்சாட்சிப் பத்திரங்கள் அன்புடன் அனுப்பினர். அவற்றையும் இந்நாடகத்தின் முதற் பதிப்பில் சேர்த்து அச்சிட்டேன். கடைசியாக இந் நாடகத்தை அச்சிடும்படிக் கூறிய என் பால்ய நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார், இதற்கு ஆங்கிலத்தில் வெகுவிமரிசையாக ஒரு முகவுரை எழுதினார்.

ஏதோ ஒருவிதமாகத் தமிழ் நாடகக் கர்த்தாவாக எனக்கு ஊக்கம் என் சிறுவயதில் அளித்த மேற்சொன்ன பெரியோர்களுக்கெல்லாம் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அக்கடனைத் தீர்க்க என்னால் ஏலாது என்று ஒப்புக்கொண்டு, “இந் நாடக மேடை நினைவுகள்” மூலமாக என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.

எனக்கு அக்காலம் இருந்த பயம் முக்கியமாக ஒன்று. இந்நூலின் முகவுரையில் நான் எழுதியபடி அதுவரையில் நாடகத் தமிழ் என்பதற்கு இலக்கியங்கள் இல்லையெனவே