பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

நாடக மேடை நினைவுகள்


என் நண்பனாகிய ஸ்ரீமான் அ. சுப்பிரமணிய ஐயருக்குக் கொடுத்தேன். இதைச் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த என் நண்பர் ஜெயராம் நாயகர், “சம்பந்தம்! அவனுக்குத்தானே கொடுத்தாய். எனக்குக் கொடுக்க வில்லையே!” என்று சொல்லி வேடிக்கையாய்ப் பொறாமை கொண்டது போல் முகத்தைச் சுளித்தார். அந்த க்ஷணம் ஒரு நாடகத்தில் இவர்களிருவரையும் இரண்டு சகோதரிகளாக அமைத்து, தங்கையின் மீது அக்காள் பொறாமை கொள்வதாக ஏற்படுத்தி இந்த ரோஜாப் பூ விருத்தாந்தத்தை அதில் ஒரு சந்தர்ப்பமாக வைத்து, எழுத வேண்டுமென்று தோன்றியது! இதுதான் இந்நாடகக் கதைக்கு என் மனத்தில் அங்குரார்ப் பணமாயது. பிறகு ஜெயராம் நாயகர் நடிக்கும் சக்திக்கேற்றபடி “லீலாவதி"யையும், அ. சுப்பிரமணிய ஐயர் நடிக்கும் சக்திக்கேற்றபடி “சுலோசனா"வையும் இரண்டு சகோதரிகளாக அமைத்து நாடகத்தை எழுத ஆரம்பித்தேன். ஸ்ரீதத்தனாகிய கதாநாயகன் வேஷம் நான் தரிக்கவேண்டுமென்று தீர்மானித்து எனது நாடகமாடும் சக்திக்கேற்றவாறு அதை அமைக்கலானேன். இப்படியே எங்கள் சபையில் அச்சமயம் நடித்த முக்கியமான ஆக்டர்களுக்கெல்லாம் இன்னின்ன வேஷம் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்து, அவரவர்களுக்கு ஒவ்வொரு நாடகப் பாத்திரத்தை அமைத்து அவர்கள் நடிக்கும் திறமைக்கேற்றபடி அந்தந்தப் பாத்திரங்களை எழுதலானேன்.

எனது நண்பராகிய ராஜகணபதி முதலியாரை நாங்களெல்லோரும் ‘நாட்டுப்புறம்! நாட்டுப்புறம்!’ என்று ஏளனம் செய்வது வழக்கம். (இவர் பிறகு கவர்ன்மென்டில் சிறந்த உத்தியோகஸ்தராய், சென்ற ஐரோப்பிய யுத்தத்தில் பிரான்ஸுதேசம் வரைக்கும் போய்த் திரும்பி வந்து பென்ஷன் வாங்கிக்கொண்டு சுவாமியின் அருளினால் சௌக்கியமாயிருக்கிறார்) இவருக்காக இந்நாடகத்தில் “சாரங்கன்” என்னும் நாட்டுப்புறத்து வழிப்போக்கன் பாத்திரம் எழுதினேன். எந்நேரமும் வேடிக்கையாய்ப் பேசி எல்லோரையும் சிரிக்கச் செய்யும் சக்தி வாய்ந்த, எனது காலஞ்சென்ற நண்பர் ம. துரைசாமி ஐயங்காருக்காக இந்நாடகத்தில் “விசித்ரசர்மா"என்னும் விதூஷகன் பாத்திரம் எழுதினேன். அவர் அக்காலம் யாராவது அவசரப்பட்டால், “அவசரப்படேல்” என்று ஒரு