பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

91


விதமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லி ஏளனம் செய்வார். இதையே அஸ்திவாரமாகக் கொண்டு, இந்நாடகத்தில் ‘அவசரப் படேல் சீன்’ என்று எனது நண்பர்களும் அந்நாடகத்தைப் படிப்பவர்களும் கூறும் காட்சியை எழுதி முடித்தேன். எனக்குப் பாடத் தெரியாதென்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு முன்பே நான் தெரிவித்திருக்கிறேன்; அன்றியும் அப்பொழுது எங்கள் சபையில் நன்றாய்ப் பாடத்தக்கவர் எம். வை. ரங்கசாமி ஐயங்கார் என்பதையும் தெரிவித்திருக்கிறேன். நான் பாடாத குறையைப் பூர்த்தி செய்வதற்கும் அவரது சங்கீதஞானம் சபையோர் நன்றாயனுபவிக்கும்படிக்கும், பாட்டு பாடுவதற்குப் பல சந்தர்ப்பங்களை அமைத்து, அவருக்காக “கமலாகரன்” பாத்திரத்தை எழுதலானேன். இப்படியே மற்ற அங்கத்தினர்க்கும் அவர்வர்கள் நடிக்கும் சக்திக்கேற்றவாறு நாடகப் பாத்திரங்களை அமைத்து எழுதினேன்.

“லீலாவதி - சுலோசனா” போன்ற புதிய கதையையுடைய நாடகங்களை நான் எழுதும் விதம் இப்படி என்று அறிய எனது நண்பர்கள் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.

ஒரு புதிய நாடகத்தின் கதை என் மனத்தில் தோற்றியவுடன் பல தினங்கள் அக்கதையை என் மனத்தில் திருப்பித் திருப்பி எனக்குச் சாவகாசமிருக்கும் பொழுதெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பேன். அப்படி யோசித்து, ஒரு விதமாக இப்படி ஆரம்பித்து, இப்படி நடத்தி, இப்படி முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று தீர்மானித்தவுடன், ‘ஏ’ என்னும் அரசருக்கு, ‘பி’ என்னும் ஏக புத்திரனுண்டு . ‘சி’ என்னும் மற்றொரு அரசருக்கு, ‘டி,இ’ என்னும் இரண்டு புத்திரிகள் இருந்தார்கள். ‘ஏ’ தன் குமாரனுக்கு மணம் செய்விக்க வேண்டித் தன் மந்திரிகளுடன் ஆலோசித்து ‘எப்’ என்னும் ராயபாரியை ‘சி’ அரசரிடம் அனுப்பினார் என்று இம்மாதிரியாகக் காட்சி காட்சியாக ஒரு காகிதத்தில் குறித்து கொண்டே போவேன். இப்படிச் செய்யும் பொழுது, கதையின் போக்கில் முன்பு நான் யோசித்ததைவிட, யுக்தமானதாக ஏதாவது தோற்றினால், இதன்படி கதையை மாற்றுவேன்; பிறகு இம்மாதிரியாகக் காட்சிகளை முற்றிலும் பிரித்தானவுடன், ஏ,சி,டி முதலிய பாத்திரங்களுக்கெல்லாம்