பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

நாடக மேடை நினைவுகள்


துடனும் நடத்திப் பார்த்தோம். தற்காலம் சில சபைகளில், ஒத்திகைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, நாடகத்திற்காக ஹாலுக்குப் பணம் கட்டி விடுகிறார்களே அம்மாதிரியான வழக்கம் எங்கள் சபையில் அக்காலம் இல்லை. நன்றாய் ஒத்திகைகள் நடத்தி எல்லோரும் தங்கள் வசனத்தையும் பாட்டையும் சரியாகப் படித்திருக்கிறார்களா என்று கண்டறிந்து, பூர்ண ஒத்திகை ஒன்றை வைத்து, அதற்கு எல்லா அங்கத்தினரையும் வரவழைத்து அவர்களைப் பார்க்கச் சொல்லி, அவர்களெல்லாம் சரியாக இருக்கிறதென அனுமதி கொடுத்த பின்தான், ஹாலுக்குப் பணம் கட்டுகிற வழக்கம்! இந்த வழக்கத்தை எங்கள் சபையாரும் இதர சபையோர்களும் பின்பற்றி வந்தால், மிகவும் நலமாயிருக்குமெனத் தோன்றுகிறதெனக்கு.

இந்த “லீலாவதி - சுலோசனா” நாடகத்திற்குப் பாட்டுகள் எழுதிக் கொடுத்தவர், என் நண்பராகிய பண்டிட் கோபாலாச் சாரியார் அவர்கள். இவர் அக்காலம் திருவல்லிக்கேணி ஹைஸ்கூலில் தமிழ் உபாத்தியாயராக இருந்தார். இப்பொழுது வயதாகி, பென்ஷன் வாங்கிக்கொண்டு, ஸ்ரீமந் நாராயணனது கிருபையால் ஜீவந்தராயிருக்கிறார். எங்கள் பாட்டு உபாத்தியாயராயிருந்த தாயுமான முதலியார், யாதோ காரணத்தினால் எங்களோடு சச்சரவிட்டு, எங்கள் சபைக்கு வருவதை நிறுத்திவிட்டபொழுது, பாட்டுகள் கட்டுவதற் கென்ன செய்வது என்று நாங்கள் கலக்கப்பட்டிருக்கும் பொழுது, என் நண்பர் எம். வை. ரங்கசாமி ஐயங்கார் இந்த கோபாலாச்சாரியார் அவர்களை எங்கள் சபைக்கு அழைத்து வந்து, எங்களுக்கெல்லாம் தெரிவித்தார். அதன் பேரில் இந்த நாடகத்திற்கு வேண்டிய பாட்டுகளை எல்லாம் இவர் வெகு விமரிசையாகக் கட்டிக் கொடுத்தார், இதற்காக ஒரு ஊதியமும் பெறாமல். இப்பாட்டுகளை யெல்லாம் எனது “கீதமஞ்சரி” என்னும் புஸ்தகத்தில் அச்சிட்டிருக்கிறேன். பண்டிட் கோபாலாசாரியார் அவர்கள் அக்காலத்தில் எங்களுக்குச் செய்த உதவி மிகவும் கொண்டாடற் பாலது; “பயன் றூக்கார்ச் செய்த உதவி நயன்றூக்கினன் மைகடலிற் பெரிது” என்ற திருவாக்கின்படி, இவர் செய்த உதவிக்காக என் மனமார்ந்த வந்தனத்தை, இந்த “நாடக மேடை நினைவுகள்” மூலமாகச் செலுத்துகின்றேன்.