பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

நாடக மேடை நினைவுகள்


மென்று தீர்மானித்து அங்கத்தினரைச் சேர்க்க ஆரம்பித்தனர். இந்தச் சபையின் அங்கத்தினரெல்லாம் பிராமணர்களே. பிராமணர்களைத் தவிர மற்றவர்களை இந்தச் சபையில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்வதில்லையென்று ஒரு நிபந்தனை செய்து கொண்டனர். இச்சபையாரும் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகங்கள் ஆட ஆரம்பித்தனர். இதன் மூலமாக அச் சபையாருக்கும் எங்கள் சபையினருக்கும் கொஞ்சம் பொறாமையுண்டானது என்று நான் ஒப்புக் கொள்ள வேண்டியதே. இதன்பேரில் இச்சபையார் எங்கள் சபையில் மிகவும் அழகாய்ப் பாடிப் பெயர் பெற்ற எம். வை. ரங்கசாமி ஐயங்கார் என்பவரை எங்கள் சபையினின்றும் நீக்கி, தங்கள் சபையில் சேர்த்துக் கொள்ளப் பிரயத்தனப் பட்டனர். இதை எப்படியாவது தடுக்க வேண்டுமென்று நாங்கள் ஒரு சூழ்ச்சி செய்தோம். “சுகுண விலாச சபையின் ஆக்டர்களாகிய நாங்கள் மற்ற சபைகளில் ஆக்டு செய்வதில்லை என்று பிரமாணம் செய்கிறோம்” என்று ஒரு பிரமாணக் கடிதத்தை வரைந்து அதில் நாங்கள் எல்லோரும் கையொப்பமிட்டோம். அதை மெல்ல மறுநாள் ரங்கசாமி ஐயங்காரைப் பார்த்தபொழுது, நான் அவரை ஒரு புறமாக அழைத்துக் கொண்டுபோய்ப் படித்துக் காட்டி, அவரது கையொப்பத்தையும் வாங்கிக்கொண்டேன். அன்று அவர் செய்த பிரதிக்ஞையினின்றும் அவர் தன் ஆயுள் வரை அணுவளவும் மாறவில்லை . அவரது பந்துக்கள், நண்பர்கள், ஆபீஸ் உத்தியோகஸ்தர்கள், இன்னும் பெரிய மனிதர்கள் அநேகர் அவரது மனத்தைக் கலைக்க எவ்வளவோ முயன்றும், மாறாதிருந்தார்; எவ்வளவு முயன்றும் அவர் மாறாதிருப்பதைக் கண்டு அந்தச் சபையார் கடைசியாக, சுகுண விலாச சபையில் சூத்திரர் மெம்பர்களாக இருக்கிறார்கள்; ஆகவே அவர்களே நாடகமாடும் பொழுது அவர்களுக்குப் பிராமணனாகிய நீ நமஸ்காரம் செய்யவேண்டி வந்தாலும் வரும், காலில் விழவேண்டி வந்தாலும் வரும்! ஆகையால் அதை விட்டுவிட வேண்டும் என்று அவர் தகப்பனார் மூலமாகவும் சொல்லிப் பார்த்தனர்! இதை நான் இங்குக் குறிப்பிட்டது, பிராமணர்களுக்கும் மற்ற ஜாதியாருக்கும் துவேஷம் உண்டு பண்ண வேண்டுமென்றல்ல; நான் எந்த ஜாதியாரையும் அவர்கள் ஜாதியின் பொருட்டுத் துவேஷிப்பதில்லை என்கிற விஷயம்