பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

97


என் நண்பர்கள் அனைவரும் அறிவார்கள்; ஆயினும் எங்கள் சபையைப் பற்றி நடந்த உண்மையையெல்லாம், என் சிறிய நண்பர்களுக்கு உள்ளது உள்ளபடி உரைத்திடல் வேண்டு மென்று நான் தீர்மானித்திருக்கிறபடியால் இதை எழுதலானேன். அன்றியும் இம்மாதிரியாக எவ்வளவோ நிர்பந்திக்கப்பட்டும், அந்த ரங்கசாமி ஐயங்கார் அணுவள வேனும் மனம் மாறவில்லை என்பதை எல்லோரும் அறியும் பொருட்டுமாம். இவரது மன உறுதியை வியந்து, இவருக்கு நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும்? இவர் இறந்து பல வருடங்கள் ஆயின; ஆயினும் இவர் எங்கள் சபைக்கும் எனக்கும் செய்த பேருபகாரத்திற்கு நான் செய்யத்தக்க கைம்மாறு என்னுளது? இதை எழுதும்பொழுது, என்னையு மறியாதபடி நான் கண்ணீர் விடுகின்றேனே அதுதான்!

மேற்சொன்னபடி எங்கள் சபை அங்கத்தினராகிய எம். வை. ரங்கசாமி ஐயங்காரை, மற்றொரு சபையார் வலித்துக் கொள்ளப் பார்த்தார்களே என்று அக்காலம் எனக்கு மிகவும் கோபம் பிறந்தது. அதன் மீது அச்சபையாரைத் தக்கபடி நான் கண்டிக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயது. அவ்வாறு எனக்கு எண்ணம் உண்டானது தவறு என்று இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் அப்பொழுது தோன்றவில்லை. இப்பொழுதிருக்கும் சிறிது நற்புத்தி அப்பொழுது இல்லை; யாராவது எனக்கு ஏதேனும் கெடுதி தற்காலம் செய்வதாக என் மனதுக்குட்பட்டால், இவ்வாறு ஆலோசனை செய்கிறேன் - அவர்கள் செய்தது சரியாகவாவது இருக்கவேண்டும் தப்பாகவாவது இருக்க வேண்டும். சரியாக இருந்தால் நான், அவர்கள் மீது கோபம் கொள்வது பாபமாகும்; தப்பாகவிருந்தால், பரமேஸ்வரன் தண்டிக்கிறார் என்று சும்மா இருந்து விடுகிறேன். அக்காலம் எனது யௌவனத்தின் கொழுமையில் இந்தப் புத்தி எனக்குத் தோன்றாமற் போயிற்று என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே.

மேற்கண்டபடி அச்சபையாரைக் கண்டிக்கத் தீர்மானித்தவனாய் உடனே அச்சபையார் எங்கு நாடகம் ஆடுகிறார்கள், அச்சபையின் அங்கத்தினர் யாவர் என்று அச்சபையைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அறிய முயன்றேன். சீக்கிரத்தில் அவர்கள் ஓர் ஒத்திகை நடத்துவதாக அறிந்து,