பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

நாடக மேடை நினைவுகள்


எனது நண்பர் ஒருவர் மூலமாக அந்த ஒத்திகைக்கு ஒரு டிக்கட்டைப் பெற்று அந்த ஒத்திகையைப் பார்க்கப்போனேன். அச்சமயம் “பிரதாப சந்திர விலாசம்” என்னும் நாடகத்தை, எழும்பூரில் பெகன்ஸ் பீல்ட் (Beaconsfield) என்னும் நாடார் பங்களாவில் நடத்தினார்கள். எனக்கு டிக்கட் கொண்டுவந்து கொடுத்த நண்பராகிய தியாகராஜன் முதலியாரும் நானும் அன்றிரவு ஒத்திகையைப் பார்த்தோம். அதைப் பார்த்த பொழுது, அதில் அ. கிருஷ்ணசாமி ஐயர், “பிரதாப சந்திரனாக” நடித்தார். இவர்தான் பிறகு எங்கள் சபையைச் சேர்ந்து அது முதல் இதுவரையில் நூற்றுக்கணக்கான தமிழ், தெலுங்கு நாடகங்களில் முக்கிய ஸ்திரீவேஷம் தரித்து, எங்கள் சபைக்கு மிகவும் பெருமை கொண்டு வந்தவர். ஆகவே இவரைப்பற்றி சற்று விவரமாய் எழுதவேண்டியது என் கடமை என்றெண்ணி அவ்வாறு செய்கிறேன். அன்றைத் தினம் இவர் பாட்டைக் கேட்டவுடன், எனக்கு மிகவும் ஆனந்தம் உண்டாச்சுது. எப்படியாவது இவரை எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று உடனே என் மனத்தில் ரகசியமாகத் தீர்மானித்தேன்.

என்னடா, நம்முடைய சபை அங்கத்தினரொருவரை இச் சபையார் வலித்துக் கொள்ளப் பார்த்தபொழுது நாம் எவ்வளவு துயரப்பட்டோம், கோபங் கொண்டோம். அப்படித்தானே அச்சபை அங்கத்தினர் ஒருவரை நாம் வலித்துக் கொண்டால் அவர்களுக்குமிருக்கும் என்னும் யோசனை எனக்குக் கொஞ்சமாவது இல்லாமற் போயிற்று! கிருஷ்ணசாமி ஐயருடைய பாடல் என் மனத்தைக் கவர்ந்த போதிலும் அவர் ஆண் வேடம் பூண்டு நடித்தது எனக்கு அவ்வளவு திருப்திகரமாயில்லை . இவருக்கு இவர் குரலுக்கேற்றபடி, ஸ்திரீ வேடம்தான் தகுந்தது என்று என் மனத்துக்குள் தீர்மானித்தேன். ஒத்திகை முடிந்து வீட்டிற்கு வந்த மறுநாள், என் நண்பராகிய மேற்சொன்ன தியாகராஜ முதலியார் மூலமாக, கிருஷ்ணசாமி ஐயரைப் பற்றிய சமாச்சாரங்களெல்லாம் தெரிந்து கொண்டு, மறு ஞாயிற்றுக் கிழமை எங்கள் சபை ஒத்திகைக்கு அவரை அழைத்து வரச்செய்து, கிருஷ்ணசாமி ஐயருடன் கலந்து பேசி, மெல்ல அவரை எங்கள் சபை அங்கத்தினராகச் சேரும்படி யுக்தி செய்தேன். சில தினங்கள் பொறுத்து அவரும் இசைந்து