பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

{{|ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்||99}}


அப்படியே எங்கள் சபையைச் சேர்ந்தார். அச்சமயம் நாங்கள் மேற்குறித்த “லீலாவதி- சுலோசனா” நாடகத்தின் ஒத்திகையை நடத்திக் கொண்டிருந்தோம். மற்றப் பெரிய நாடகப் பாத்திரங்களெல்லாம் மற்றவர்களுக்கு முன்பே கொடுத்துவிட்டபடியால், மிகுதியாயிருந்த ஒரு சிறு நாடகப் பாத்திரமாகிய காந்திமதி யென்னும் பாகத்தை இவருக்குக் கொடுத்தேன். அவரும் சிறுபாகமாயிருக்கிறதென்று ஆட்சேபணை செய்யாமல் ஒப்புக்கொண்டு அந்தப் பாகத்தை எழுதிக்கொண்டு, உடனே எங்களுடன் சேர்ந்து ஒத்திகை நடத்தி வந்தார். இதில் இவருக்கு இரண்டு பாட்டுகளுக்குத்தான் இடமிருந்தது. அந்த இரண்டு பாட்டுகளையும் சுறுசுறுப்புடன் கற்று மிகவும் நன்றாய் ஒத்திகைகளில் பாடிக் கொண்டிருந்தார். இவ்விடம் என் பழைய நண்பராகிய இவரிடம் அப்பொழுதே இருந்த ஒரு பெரும் நற்குணத்தை நான் எழுத வேண்டியது அதி அவசியம். முதலில் மற்றொரு சபையில் கதாநாயகனாக வேடம் தரித்திருந்த போதிலும் எங்கள் சபையைச் சார்ந்த பொழுது ஒரு சிறு நாடகப் பாத்திரத்தை நடிக்க ஒப்புக் கொண்டார்! தற்காலத்தில் நாடக மேடையில் பயிற்சி ஒன்றுமில்லாதவர்கள்கூட, ஒரு சபையில் சேர்ந்தவுடன், கதாநாயகன் அல்லது கதாநாயகி வேடம் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள்! மேலும் இவர் நல்ல சாரீரத்துடன் சங்கீதப் பயிற்சி நன்றாயடைந்தவராயிருந்தபோதிலும் இரண்டே இரண்டு பாட்டுகளைக் கொடுத்த போதிலும், போதும் என்று ஒப்புக்கொண்டு அதை நன்றாய்ப் பயின்று வந்தது, மெச்சத்தக்கது. தற்காலத்தில் இவரது சாரீரத்தில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாதவர்கள் ஒரு ஸ்திரீ வேடம் கொடுத்தால், இவ்வளவு பாட்டுதானா, இன்னும் அதிகம் வேண்டும் என்று சச்சரவிடுபவர்கள் பலரைக் கண்டிருக்கின்றேன். இந்தக் கிருஷ்ணசாமி ஐயர் எங்கள் சபையில் சற்றேறக்குறைய முப்பத்தொன்பது வருடங்களாக முக்கியமான பாகங்கள் நடித்ததைப் பற்றிப் பிறகு விஸ்தாரமாய் நான் எழுத வேண்டி வரும். ஆயினும் முதலில் மற்ற ஆக்டர்களெல்லாம் இவரிடமிருந்து கற்கவேண்டிய ஒரு முக்கியமான நற்குணத்தை நான் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். அதென்ன வென்றால், தான் எடுத்துக்கொண்ட பாத்திரத்தை நடிப்பதில் யாராவது இப்படி படித்தால்