பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடக மேடை நினைவுகள்


நலமாயிருக்கும் என்று கூறுவார்களானால் அதை அசட்டை செய்யாது கவனிக்கும் குணமேயாம். யார் என்ன சொன்ன போதிலும், இவர்களுக்கென்ன தெரியும், இவர்கள் என்ன நம்மைவிட அறிந்தவர்களாயென்று அவமதிக்காமல், இவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வதா என்று கர்வமும் கொள்ளாமல், அவர்கள் சொல்லுவதை மரியாதையுடன் கவனிக்கும் குணம் மிகவும் அருமையானது. இந்த நற்குணத்தை என் பழைய நண்பராகிய கிருஷ்ணசாமி ஐயர், அன்று முதல், இன்று வரை உடைத்தாயிருக்கின்றார் என்று நான் உறுதியாகச் சொல்வேன். அன்றியும் முதலில் என்னைப் பார்த்த நாள் முதல், இதுவரையில் இவர் என்னை நாடக விஷயத்தில் தனது ஆசாரியனாக மதித்து வருகிறார். அக்கௌரவத்தை ஏற்க என்னிடம் பாண்டித்யமில்லையென்று எண்ணுகிறேன். ஆயினும் அதுமுதல் இதுவரை, சபையில் தமிழில் எந்த நாடகப் பாத்திரத்தை ஆட ஒப்புக்கொண்ட போதிலும், என்னிடம் வந்து இதை எப்படி நடிப்பது என்று எல்லா விவரங்களையும் பொறுமையாகக் கேளாமற் போவதில்லை. சென்ற 1930ஆம் வருஷம் தனக்கு ஏறக்குறைய ஐம்பத்தைந்து வயதாகியும், நாடகமாடுவதில் முப்பத்தேழு வருடங்கள் பயிற்சி பெற்றவராயினும், சற்றேறக் குறைய ஐந்நூறு நாடகங்களில் நடித்தவராயினும், “கொடையாளி கர்ணன்” என்னும் என்னுடைய ஒரு நாடகத்தில், குந்திதேவியாக நடிக்க நேர்த்தபொழுது, ஒவ்வொரு வரியையும் கிரந்தகர்த்தாவாகிய நான் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்கிறேன் என்பதைக் கவனமாய்க் கேட்டு, பிறகு நடித்தார். இவரது இந்த வழக்கமானது நாடக மேடையில் பெயர்பெற வேண்டுமென்று விரும்பும் எனது இளைய நண்பர்களெல்லாம் நன்கு மதிக்கத்தக்கதென இதனை இங்கு வரையலானேன். ஆக்டர்களெல்லோரும் எவ்வளவு தான் தேர்ச்சி பெற்றவர்களாக்யிருந்தும் நாடகக் கர்த்தாவின் அபிப்பிராயத்தை முன்பு அறிந்து, பிறகே அந்நாடகத்தில் ஆடவேண்டியது அவசியமென்பது என்னுடைய உறுதியான எண்ணம்.

இந்த “லீலாவதி-சுலோசனா” நாடகமானது எங்கள் சபையாரால் 1893ஆம் வருஷம் அக்டோபர் மாதம் விக்டோரியா பப்ளிக்ஹாலில் ஆடப்பட்டது. இரவு 9 மணிக்கு ஆரம்பித்து