பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

நாடக மேடை நினைவுகள்


என்பது என் நினைவு. முக்கியமாக அந் நாடகத்தின் இடையில் ஒரு முக்கியமான காட்சியில், இவர் தாயுமானவர் பாடலில் தோடி ராகத்தில் “காடுங்கரையும்” என்னும் பாடலைப் பாடியது மிகவும் ரமணீயமாயிருந்ததென அனைவரும் புகழ்ந்தனர். அக்காட்சி முடிந்தவுடன், அக்காலத்தில் தமிழறிந்தவர்களுக்குள் பிரசித்தி பெற்ற பல தமிழ் நூல்களை அச்சிட்ட ராவ் பஹதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை என்னும் பெரிய மனிதர், நாகடமேடைக்குள் வந்து இப்பாட்டைப் பாடிய சிறுவன் யார் என்று விசாரித்து, என் நண்பராகிய எம். வை. ரங்கசாமி ஐயங்காரை நேராகக்கண்டு, சிலாகித்துப் போனார். இந்த “லீலாவதி - சுலோசனா” நாடகமானது அதற்கப்புறம் சற்றேறக்குறைய 50 முறை எங்கள் சபையாரால் ஆடப்பட்டிருக்கிறது. மற்றப் பாட்டுகளை யெல்லாம் மற்ற ஆக்டர்கள் எவ்வளவோ மாற்றிப் பாடியபோதிலும், இந்த “காடுங்கரையும்” என்னும் தாயுமானவர் பாடலை மாத்திரம், எந்த ஆக்டர் கமலாகரன் வேஷம் பூண்டபோதிலும், எம். வை. ரங்கசாமி ஐயங்கார் பாடிய அந்தத் தோடி ராகத்திலேயே பாடி வருகின்றனர். எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு இதர ஆக்டர்கள் செய்த கௌரவம் இதுவேயாகும். இவர் நடித்ததும் மிகவும் நன்றாயிருந்தது. என்னுடன் இந்த நாடகத்தில் கமலாகரன் வேஷம் பூண்டு அநேகர் நடித்திருக்கின்றனர். ஆயினும் இந்த வேஷத்தில் எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு இணையாக ஒருவரும் நடிக்கவில்லை என்பதே என் தீர்மானமான அபிப்பிராயம்; இந்த வேடத்திற்கு அவ்வளவு பொருத்தமானபடி அவர் பாடி நடித்தார்.

ஸ்திரீ வேஷங்களில் த. ஜெயராம் நாயகர் “லீலாவதி” யாக நடித்தது மிகவும் கொண்டாடப்பட்டது. இவருக்குப் பிற்காலம் எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் இந்த நாடகத்தில் அநேகர் இந்த “லீலாவதி” வேடம் பூண்டு நடித்திருக்கின்றனர். ஆயினும் கேவலம் வசனத்தை மாத்திரம் கருதுமிடத்து அன்றைத் தினம் இவர் லீலாவதியாக நடித்ததுபோல் மற்றொருவரும் நடித்ததில்லை என்று நான் நிச்சயமாய்க் கூறுவேன். இவர் அன்று ஒரு தரம்தான் இந்த லீலாவதியாக நடித்தார். பிறகு இவர் இந்த வேஷம் பூண்டிலர். இருந்தும் இவர் அன்றிரவு நடித்தது என் மனத்தில் இன்னும் படிந்திருக்கிறது. இவர் பிறகு இரண்டு முறை ஸ்திரீ வேடம்