பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

105


பூண்டனர் என்பதை முன்பே தெரிவித்திருக்கின்றேன். இவர் அன்று நடித்ததில் ஒரு வேடிக்கையான சந்தர்ப்பம் நேரிட்டது. இவருக்கு இரண்டு பாட்டுகள் இருந்தன. அவற்றுள் இரண்டாவதைப் பாடவேண்டிய சந்தர்ப்பத்தில் பாட மறந்து விட்டனர்! அக்காட்சி முடிந்தவுடன், நான் நேபத்யத்தில் (Green Room) வேஷம் பூண்டு கொண்டிருக்கும் பொழுது, என்னிடம் ஓடிவந்து “சம்பந்தம்! சம்பந்தம்! என்னுடைய இரண்டாவது பாட்டைப் பாட மறந்து விட்டேன்! என்ன செய்வது?” என்று கவலையுடன் கேட்டார். நான் உடனே அப்பாட்டைக் கொஞ்சம் மாற்றி, பின்வரும் காட்சியில் அதைச் சந்தர்ப்பத்திற்கேற்றபடி செய்து, அதில் பாடும்படியாகச் சொன்னேன். அப்படியே அதைப் பாடி முடித்தார்! ஆக்டர்களாகிய எங்களுக்குத் தவிர நாடகத்தைப் பார்க்க வந்த மற்ற ஜனங்களுக்கு இது தெரியாது. இம்மாதிரியாக அநேக நாடகங்களில் தவறுகள் வாய்ப்பதுண்டு. அவற்றைச் சரிப்படுத்திக்கொண்டு சமாளிக்கும்படியான சக்தியிருப்பது மிகவும் அனுகுணமாம்.

மேற்கண்ட நாடகப் பாத்திரங்கள் தவிர, மற்றுமுள்ள பாத்திரங்களையும் தரித்தவர்கள் ஏறக்குறைய நன்றாகவே நடித்தார்களென்று எண்ணுகிறேன். என்னுடைய அபிப் பிராயத்தில் இந்த நாடகமானது பார்த்தவர்களுடைய மனத்தை ரமிக்கச் செய்ததன் முக்கியக் காரணம், சற்றேறக்குறைய எல்லா ஆக்டர்களும் தங்கள் பாடங்களையும் பாட்டுகளையும் நன்றாகக் கற்று மொத்தத்தில் குறையொன்றுமின்றி நடித்ததேயாம்.

நாடகம் அன்றிரவு 31/2 மணிக்கு முடிந்தவுடன், நாடகம் பார்க்க வந்த பெரிய மனிதர்களுள் பலர் நாடக மேடைக்கு வந்து எங்களைப் புகழ்ந்து கூறி உற்சாகப்படுத்தினர். எங்கள் வேஷங்களை யெல்லாம் களைந்த பிறகு ஆக்டர்களில் பெரும்பாலர் நாடகமாடிய மேடையின்மீதே படுத்துக் கொண்டு, பேசிக் காலம் கழித்தோம். அன்றிரவு நாங்கள் தூங்கவேயில்லையென்றே சொல்ல வேண்டும். நாடகம் நன்றாயிருந்தது என்கிற சந்தோஷத்தில் எங்களுக்குத் தூக்கமே வரவில்லை. பொழுது விடிந்தவுடன் பல் விளக்கிக்கொண்டு காப்பி வரவழைத்துச் சாப்பிட்டுவிட்டுப் பிறகுதான் அவரவர்கள் வீடு போய்ச் சேர்ந்தோம்!