பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

நாடக மேடை நினைவுகள்


இந்த “லீலாவதி - சுலோசனா” நாடகம்தான் எங்கள் சபையை முதல் முதல் சென்னையில் பிரபலமடையும்படி செய்தது. அந்நாடகம் அது முதல் இதுவரையில் எங்கள் சபையோரால் சுமார் 50 முறை ஆடப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நாடகத்தின் மூலமாக எங்கள் சபைக்கு 25000 ரூபாய்க்கு மேல் வரும்படி வந்திருக்கிறது. சபைக்கு எப்பொழுதாவது பணம் வேண்டியிருந்தால் “லீலாவதி - சுலோசனா” போடுகிறதுதானே என்று அங்கத்தினர் வேடிக்கையாகப் பேசிக்கொள்வார்கள். இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்புவரை, வெளியூர்களில் நாடகமாடும் பொழுதும், சென்னையில் டிசம்பர் மாதம் தொடர்ச்சியாக நாடகங்கள் போடும் பொழுதும், முதலில் இந்த நாடகத்தைத்தான் போடுவது எங்கள் சபையில் வழக்கமாயிருந்தது.

அன்றியும் இந்நாடகமானது மற்றச் சபையோர்களாலும் பெரும்பாலும் நடிக்கப்பட்டிருக்கிறது. நான் எழுதிய நாடகங்களுள் இதைவிட “மனோஹரன்” ஒன்று அதிகமாக ஆடப்பட்டிருக்கிறது.

எங்கள் சபையாரன்றி இந்நாடகத்தை முதல் முதல் நடித்தது, எனக்கு ஞாபகம் இருக்கும்வரை, கோவிந்தசாமி ராவின் ‘மனமோன நாடகக் கம்பெனி'யாரே. அவர்கள் சென்னையில் இந்த நாடகத்தை நடித்தபொழுது, என் உத்தரவைப் பெற்றே நடித்தார்கள். கோவிந்தசாமிராவ் என்னை வரும்படி நேராக அழைத்தார். முதல் முதல் நான் எழுதிய நாடகத்தை மற்றவர்கள் நடிக்கக் கண்டது இதுதான். அதுவரையில் நான் எழுதிய நாடகங்களிலெல்லாம் நானே நடித்துக்கொண்டிருந்தபடியால், இம்மாதிரியான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்காமற் போயிற்று. அக்கம்பெனியில் சிறந்த பாடகராயிருந்த சுந்தரராவ் என்பவர் சுலோசனையாக நடித்தார். குப்பண்ணராவ் என்பவர் லீலாவதியாக நடித்தார். இதில் ஒரு விசேஷம், நாடகத் தோரணையை நோக்குமிடத்து, லீலாவதியே கதாநாயகி என்று ஒருவிதத்தில் சொல்ல வேண்டும். அன்றியும் சுலோசனா பாத்திரத்தைவிட லீலாவதி பாத்திரத்தை ஆடுதல் மிகவும் கடினம் என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. அப்படியிருந்தும், ஏறக்குறைய எல்லாக் கம்பெனிகளிலும், “அயன் ஸ்திரீ பார்ட்” என்று சொல்லப்படும் முக்கியமான ஸ்திரீ வேஷம்