பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

107


தரிப்பவரே, சுலோசனா பாத்திரமாக நடிப்பது வழக்கமாய்விட்டுது. கதாநாயகன் மனைவி கதாநாயகி என்று தீர்மானித்து விடுகிறார்கள். இது பெரும்பாலும் வாஸ்தவமாக இருந்த போதிலும், அப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை. இதை ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கற்கும் என் இளைய நண்பர்கள் நன்கு அறிவார்கள். இதில் இன்னொரு வேடிக்கை, சுந்தரராவ் என்பவர் கொஞ்சம் ஸ்தூல சரீரமுடையவர்; குப்பண்ணராவ் மெல்லிய சரீரமுடையவர். இருந்தும் குப்பண்ணராவ் மூத்தவளாகவும் சுந்தரராவ் இளையவளாகவும் நடித்தார்கள். சில குடும்பங்களில் மூத்த பெண்ணைவிட இளைய பெண் பெரிய உடம்பை உடைத்தாயிருப்பதை நான் அறிந்திருக்கிறேன். இருந்தும், கூடுமானால் இதைத் தவிர்த்திருந்தால் நலமாயிருக்குமெனத் தோன்றியது. அன்றைத் தினம் நடிகரில் சுந்தர ராவ் பாடல் நான் முன்பே குறித்தபடி மிகவும் நன்றாயிருந்தது; ஆயினும் கேவலம் வசனத்தை மாத்திரம் கருதுங்கால் குப்பண்ணராவ் நடித்ததே சிலாகிக்கத்தக்கதாயிருந்தது. நான் பார்த்த அநேகம் லீலாவதிகளுக்குள், ஜீவனத்துக்காக நடிக்கும் நடர்களுக்குள் இவரே சிறந்தவரென்று நான் சொல்லவேண்டும். ஜீவனத்துக்காக நடிக்கும் பிரபல நடிகர்கள் சாதரணமாக அநேக காரணங்கள் பற்றி நெடு நாள் ஜீவித்திருப்பதில்லை. இதற்கு விரோதமாக இந்தக் குப்பண்ணராவ் அநேக வருஷங்கள் ஜீவித்திருந்தார். கடைசியாகச் சில வருஷங்களுக்கு முன், அவருக்கு வயது அதிகமான போதிலும், இந்த லீலாவதி வேடம் பூண்டு நடித்தபோது, பூர்வகாலத்திலிருந்த மிடுக்குடனேயே வெகு விமரிசையாக நடித்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இவரிடமிருந்து, இந்நாடக ஆசிரியனாகிய நானே, லீலாவதி பாத்திரம் நடிப்பதில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன்! அதுவரையில் எங்கள் சபையில் இந்த நாடகம் ஆடிய பொழுதெல்லாம் லீலாவதி, இரண்டாவது காட்சியில், தன் தங்கை சுலோசனையைக் கொல்வதற்காகப் பாலில் விஷமிடவேண்டிய சந்தர்ப்பத்தில், ஒரு காகிதப் பொட்டலத்தில் விஷமருந்தை வைத்து, அதை அப்பாலில் கொட்டிவிடுவது போல் நடித்து வந்தோம். இதுதான் லீலாவதி ஆக்டருக்கு நான் கற்பித்தது. முதல் முதல் குப்பண்ணராவ் இந்த கோவிந்தசாமி ராவ் கம்பெனியில் நடித்த பொழுது, வெகு புத்தி சாதுர்யமாய்த்