பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

நாடக மேடை நினைவுகள்


ஞாபகம்) அதைப்பற்றி ஒரு விமரிசை எழுதினார். அன்றியும் பிறகு ஒருநாள் அவர் என்னைச் சந்தித்த பொழுது, அவரது அபிப்பிராயத்தை எனக்கு நேராகவும் அறிவித்தார். அதன் தாத்பர்யம் என்னவென்றால், “நாடகம் நன்றாகத் தானிருந்தது; நன்றாகத்தான் நடிக்கப்பட்டது; ஆயினும் நாடகாசிரியன் அதைக் கலியாணமாகிய சந்தோஷத்துடன் முடித்திருக்கக் கூடாது; துக்ககரமான மரணங்களுடன் முடித்திருக்க வேண்டும். எங்ஙனமெனில், சுலோசனையைக் கமலாகரன் ஸ்ரீதத்தன் உத்தரவின்படி கொன்றிருக்கவேண்டும்; உடனே ஸ்ரீதத்தன் ஓடிவந்து, சுலோசனை நிரபராதியாகக் கொல்லப் பட்டதைக் கண்டு தன்னைத்தானே வெறுத்துக்கொண்டு தற்கொலை புரிந்திருக்க வேண்டும்; இதைவிட்டு, இந் நாடகாசிரியன், சுலோசனையும் ஸ்ரீதத்தனும் மணம் புரியும்படி விட்டது, தற்கால நாடகவியலுக்குப் பொருத்தமானதன்று” என்று தெரிவித்தார். நாடகத்தை சோகரசத்துடன் முடிக்க இந் நாடக ஆசிரியனுக்குத் தைரியம் இல்லை என்று ஏளனம் செய்தார். இதைக் கேட்டவுடன், எனக்குள் ஓர் வீம்பு உண்டாயிற்று. ‘ஆகட்டும்! அப்படியா சமாச்சாரம்! நான் இனி எழுதுகிற ஒரு நாடகத்தில், ஒரு நாடகப் பாத்திரம் பாக்கியில்லாமல் எல்லோரையும் கொன்று, முடிவில் உனக்கு எவ்வளவு சோக ரசம் வேண்டுமோ, அதை வட்டியுடன் தருகிறேன்!” என்று தீர்மானித்தேன். அந்தத் தீர்மானத்துடன் எழுதிய நாடகம் “கள்வர் தலைவன்.

இக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தைப் பெரும்பாலும் எங்கள் எழும்பூர் பங்களாவாகிய “பம்மல் அவுஸ்” என்னும் இடத்தில் எழுதி முடித்தேன். அச்சமயம் யாதோ ஒருகாரணத்தினால் என் மனம் சஞ்சலமடைந்திருந்தது. அதனால் ஒரு நாடகத்தில் எவ்வளவு சோகரசமமைக்கக் கூடுமோ அவ்வளவையும் நிரப்பி இந்த நாடகத்தை எழுதினேன். இந்நாடகத்தை எனது நண்பர்கள் வாசித்துப் பார்ப்பார்களாயின் இதன் உண்மை அவர்களுக்குத் தெரியும். புத்திக் கூர்மையுடைய ஒருவன் ஈசன் தனக்கருளிய புத்தியை நல்வழியில் உபயோகியாது, தீய வழியில் உபயோகித்தால், அதனால் என்னென்ன தீமைகள் நேர்கின்றன என்பதே இந் நாடகத்தின் முக்கிய கருத்தாம்.