பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

நாடக மேடை நினைவுகள்


ரங்கசாமி ஐயங்காருமே; இவர்களுடைய பாடல்களும் வசனமும் மிகவும் நன்றாக இருந்ததென்று எல்லோரும் புகழ்ந்தனர். முக்கியமாகப் பாலசூர்யன், தன் தாயாகிய சௌமாலினியை விட்டுச் சிறைச்சாலையிலிருந்து பிரிக்கப்பட்ட காட்சி, எல்லோருடைய மனத்தையும் உருக்கியது. சௌமாலினி தன் கைக் குழந்தையுடன் மரணமடைந்த காட்சி அநேகம் ஸ்திரீ புருஷர்கள் கண்ணீர்விடச் செய்ததெனக் கேள்விப்பட்டேன். நானும் ஜெயபாலனாக நடித்தது நன்றாயிருந்ததெனச் சொன்னார்கள்.

நான் அன்று ஜெயபாலன் வேடம் பூண்டதில் ஒரு சிறு சமாச்சாரம் ஞாபகமிருக்கிறது. அப்பொழுது எனக்கு வயது 21. நல்ல யௌவனம். என் தாடைகளெல்லாம் நல்ல ரக்த புஷ்டியுடையவைகளாயிருந்தன. விஷத்தினால் பீடிக்கப்பட்ட ஜெயபாலன் வேடத்திற்கு அப்படி யிருக்காதென்றெண்ணித் தாடைகள் வற்றினவைகளாய்த் தோற்றுமாறு, நாடக தினத்திற்குச் சற்றேறக் குறைய ஒரு மாச காலத்துக்கு முன்பாக, ஒரே வேளை உணவு உட்கொண்டு வந்தேன்! தற்காலம் எப்படிப்பட்ட ரக்த புஷ்டியுடையவனையும், மெலிந்த வனாகத் தோற்றும்படி செய்யவல்ல-முகத்தில் பூசும்படியான வண்ணங்களின் குணத்தை அப்போது அறிந்திலன். அறிந்திருந்தேனாயின் நான் அவ்வாறு கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லை.

இந்நாடகத்தைப்பற்றி இன்னொரு சமாச்சாரம் முக்கியமாக எனக்கு ஞாபகம் வருகிறது. நாடகத்தின் இடை இடையில் ஆக்டர்கள் நன்றாய் நடிக்கும்பொழுதெல்லாம் சபையோர்கள் கரகோஷம் செய்து வந்த போதிலும், நாடகம் பூரணமாகி முடிந்தவுடன், எல்லோரும் மௌனமாயிருந்தனர்! ஒரு பத்து விநாடி செயலற்றிருந்தே பிறகு மெல்ல எழுந்து அவரவர்கள் விட்டிற்குச் சென்றனர்; இதற்கு முக்கியமான காரணம் கடைசி காட்சியில், கள்வர்கள் தவிர மற்றெல்லா நாடகப் பாத்திரங்களும் அரங்கத்தில் மடிந்ததே என்பதற்குச் சந்தேகமில்லை. மிகவும் துக்ககரமாய் முடிந்தது ஜனங்களைப் பிரமிக்கச் செய்தது; திருப்தியைக் கொடுக்கவில்லை; இதுவரையில் பாராதபடி, என்னடா இப்படி நாடகம் முடிந்ததே என்கிற