பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

117


ஆச்சரியத்துடனும் விசனத்துடனும் சென்றனர் என்றே சொல்ல வேண்டும். இதைப்பற்றி, இக் ‘கள்வர் தலைவன்’ நாடகத்தை நான் அச்சிட்ட பொழுது, பாயிரத்தில் எனது நண்பராகிய ஸ்ரீனிவாஸ ஐயங்கார் வெகு விமரிசையாய் எழுதியிருக்கிறார். இதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பும் நண்பர்கள் இந்நாடகத்தின் முதற் பதிப்பில், ஆங்கிலத்தில் இதைக் காணலாம். இப் புஸ்தகம் இரண்டு பதிப்பும் ஆகிவிட்டது. மூன்றாம் பதிப்பு சீக்கிரத்தில் வெளிவரும்.

இந்நாடகத்தைப்பற்றிக் கடைசியாக என் நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்நாடகமானது சோகரசமமைந்ததாய், மரணங்களுடன் முடிவு பெறுகின்றமையால், கடைசியில் எங்கள் சபை வழக்கம்போல், “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்னும் ஸ்தோத்திரப் பாடலையாவது அல்லது மங்களப் பாட்டையாவது, பஹிரங்கமாய்ப் பாடாது நிறுத்தியதேயாம். அதுமுதல் சோகத்துடன் முடியும் நாடகங்களிலெல்லாம் இந்த வழக்கத்தை அனுசரித்து வருகிறோம்; ஆயினும் பழைய வழக்கத்தை முற்றிலும் விடக்கூடாதென்று திரைக்குப் பின்னால், மெல்ல, மேற்சொன்ன பாட்டுகளைப் பாடுகிறோம். தற்காலத்தில் இந்தக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தை முதல் முதல் என் நண்பர்களுக்கெல்லாம் படித்துக் காட்டிய பொழுதே, எனது பழைய நண்பராகிய ஜெயராம் நாயகர், “என்னப்பா இது? மிக்க துக்ககரமாயிருக்கிறதே! கடைசியில் எல்லோரும் இறந்து போய்விடுகிறார்களே ! அசுபமாய் முடிகிறதே! இதை ஆடுவது நமது சபைக்கு விருத்திகரமல்ல” என்று ஆக்ஷேபித்தார். அவர் சொன்னதற்குத் தகுந்தாற்போல், எங்கள் சபையார் இந்த நாடகத்தை நடித்த பிறகு பலவிதக் காரணங்களால் ஒரு வருஷம் வரையில் ஒரு நாடகமும் ஆடவில்லை! அங்கத்தினர்க்குள் குட்டிக் கலகங்கள் பிறந்து சபை செயலற்றிருந்தது. அன்றியும், இது என் சொந்த நாடகமாயிருந்த போதிலும் இதன்மீது நான் அவ்வளவு பிரீதி கொள்ளாததற்கு இன்னொரு முக்கியமான காரணம் நேர்ந்தது. இந்நாடகத்தை நடித்தபொழுது, என் அருமைத் தந்தை காசி யாத்திரையாகப் போயிருந்தார் என்று முன்பே தெரிவித்தேனல்லவா? அவர் காசியிலிருந்த பொழுது இந்நாடகத்தை