பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

நாடக மேடை நினைவுகள்


படவில்லையென்றே சொல்லவேண்டும். என் குறிப்பின்படி, இது வரையில் என் அனுமதியின் மீது 80 தரம்தான் ஆடப் பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் முக்கியமாக, அது சோககரமாய் முடிவு பெறுவதுவேயாம் என்பதற்கு ஐயமில்லை. நமது தேசத்தார் நாடகங்களைப் பார்க்கப் போகும்பொழுது, அவைகள் க்ஷேமமாய், சந்தோஷமாய் முடிய வேண்டுமென விரும்புகிறார்கள் என்பது திண்ணம்.

‘யயாதி’ என்னும் நாடகத்தை வெகு விரைவில் எழுதி முடித்ததாக முன்பே கூறியுள்ளேன். எழுதுவதற்குச் சரியாக இரண்டு தினங்கள்தான் பிடித்தன; சாப்பிடும் வேளை தூங்கும் வேளை தவிர மற்ற வேளைகளிலெல்லாம் ஒரே மூச்சாய் உட்கார்ந்து எழுதினேன் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியாக நான் எழுதி முடித்ததும், கீழே அறையில் நோயாய்ப் படுத்திருந்த என் தந்தையிடம் அனுப்புவேன். அவ்வறையில் என் கடைசித் தங்கை, அதை அவருக்குப் படித்துக் காட்டுவாள். அதில் முக்கியமாக பப்பரன் என்னும் விதூஷகனுடைய பாகம், படிக்கும் என் தங்கைக்கும் கேட்கும் என் தந்தைக்கும் அதிக நகைப்பை விளைத்தது. என் அருமைத் தந்தையின் அந்திமகாலத்தில் இம்மாதிரியாக வாவது அவருக்குச் சந்தோஷத்தை விளைவித்தேனே என்று இப்பொழுதும் நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். ஒவ்வொரு தினமும் சாயங்காலம் சபைக்குச் சென்று என்னுடைய நண்பர்களிடம் நான் எழுதிய காட்சிகளைக் கொடுப்பேன். அவர்களும் அதி விரைவில் தங்கள் தங்கள் பாகங்ளை எழுதிப் படித்து விட்டார்கள். அதே வாரம் வியாழக்கிழமை இரவு முழு ஒத்திகை வைத்துக் கொண்டோம். அடுத்த சனிக்கிழமை விக்டோரியா ஹாலில் நாடகத்தை நடத்தினோம். என் தந்தையார் படியேறிச் செல்ல தேகபலமில்லாதவரா யிருந்தபடியால், ஏழு ஏழரை மணிக்கெல்லாம் ஸ்திரீகள் வருவதற்கு முன்பாக, ஸ்திரீகள் வருவதற்காகப் பிரத்யேகமாய் ஏற்படுத்தியிருக்கும் படி வழியாக அவரை ஒரு சாய்வு நாற்காலியில் உட்காரவைத்து, மேல்மாடிக்கு நாடகம் பார்க்க எடுத்துச் சென்றோம். இதுதான் அவர் நான் எழுதிய நாடகங்களில் கடைசியாகப் பார்த்த நாடகம்.