பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

125


அன்னை வீற்றிருந்த என் ஹிருதய ஸ்தானத்தில், அவர் வீற்றிருக்க ஆரம்பித்தார் என்றே நான் கூற வேண்டும். இவர் மேற்கூறியவாறு எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்ந்த பிறகு இவருக்கு முதல் முதல் வேஷம் கொடுத்தது நான் மேற்கூறிய “யயாதி"என்னும் நாடகத்தில்தான். அந்நாடகத் தில் முக்கியமான ஸ்திரீவேஷங்கள் இரண்டே. சர்மிஷ்டையும், தெய்வயானையும்; அவ்விரண்டு பாத்திரங்களும் ஜெயராம் நாயகருக்கும், துரைசாமி ஐயருக்கும் கொடுக்கப்பட்டன. ஆகவே சி. ரங்கவடிவேலுவுக்கு (இனி ரங்கவடிவேலு முதலியார் என்று எழுதாமல், நான் அவர் உயிருடன் இருந்த பொழுது அழைத்தபடி ரங்கவடிவேலு என்றே எழுதுவேன்) பாங்கியாகிய நீலலோசனி எனும் பாத்திரத்தைக் கொடுத்தேன். இதற்கு முக்கியக் காரணம், ஸ்திரீ வேஷம் பூண்டால் எப்படி யிருக்கிறதென நான் நேரிற் காண வேண்டும் என்னும் இச்சையேயாம். அன்றியும் அக்காலத்தில், யார் வந்து எங்கள் சபையில் அங்கத்தினராய்ச் சேர்ந்த போதிலும், முதல் முதல், ஒரு சிறிய பாகமே கொடுப்பது வழக்கமாயிருந்தது; சிறு பாகங்களில் எப்படி நடிக்கிறார்களென்று பார்த்தே, பிறகு அதில் திருப்திகரமாயிருந்தால் பெரிய பாகங்கள் கொடுத்து, கடைசியில் முக்கியப் பாத்திரங்களைக் கொடுப்பது எனத் தீர்மானித்து அதன்படி நடந்து வந்தோம். இப்படித்தான் பிறகு, கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாகவும் எங்கள் சபையில் நடித்த அங்கத்தினரெல்லாம் முதல் முதல் சிறு பாகங்களையே பெற்று நடித்தனர். தற்காலத்தில் ஒரு சபையைச் சேர்ந்தவுடன், எனக்கு ஹீரோ (Hero) வேஷம் அல்லது ஹீரேயின் (Heroine) வேஷம் வேண்டுமென்று சச்சரவிடும் எனது இளைய நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக. படிப்படியாகத்தான் மெத்தையின் மீது ஏற வேண்டும்; ஒரேமுட்டாய் எகிறிக் குதிக்கப் பார்த்தால், பெரும்பாலும் கால் ஒடிந்து போவதுதான் கை கண்ட பலனாகும் என்பது உலகத்தில் நாம் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு பெரிய உண்மையாம்.

இந்த “யயாதி” நாடகத்தில், என் நண்பர் நீலலோசனியாக நடித்தார். இவர் நடித்த பாத்திரத்திற்கு அப்பெயர் நான் கொடுத்த காரணம் அவர் அதை நடிக்கப் போகிறார் என்பதே. நாடகம் முழுவதிலும் இரண்டு காட்சிகளில்தான் நீலலோசனி