பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

நாடக மேடை நினைவுகள்


வரவேண்டியதிருக்கிறது; அவரது பாகம் முழுவதும் சேர்த்தாலும் சுமார் முப்பது வரிகளிருக்கலாம். அந்தப் பாகத்திற்கு ஒரு பாட்டும் கிடையாது. இருந்தபோதிலும், நாடகத்தைப் பார்க்க வந்தவர்களும், எங்கள் சபையின் அங்கத்தினரும், இவரது பாகம் சிறியதாயிருந்த போதிலும் நன்றாய் நடித்தார், ரூபமும் மிகவும் அழகாயிருந்தது என்று மெச்சினார்கள். ஸ்திரீயின் உடையில் அவரை நாடக மேடையில் கண்டபின், நானும் அவ்வாறே எண்ணினேன். இந்த ‘யயாதி’ நாடகத்தைப்பற்றி எனக்கு வேறொன்றும் அவ்வளவாக ஞாபகமில்லை .

இந்நாடகம் பிற்காலம் எங்கள் சபையோராலும் இதர சபையோர்களாலும் பன்முறை ஆடப்பட்டது. புதிதாய் ஆரம்பிக்கும் நாடக சபைகள், “சுந்தரி” “புஷ்பவல்ல” என்னும் முன்னே நான் கூறியிருக்கும் இரண்டு நாடகங்களுக்குப் பிறகு, இந்த நாடகத்தைச் சுலபமாய் எடுத்துக்கொண்டு ஆடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒன்பதாம் அத்தியாயம்

னி எனது ஆறாவது நாடகமாகிய “மனோஹரன்” என்னும் நாடகத்தைப் பற்றி எழுதுகிறேன். இதைப்பற்றி, மற்ற நாடகங்களைக் குறித்து எழுதியதைவிட அதிக விவரமாய் எழுத வேண்டியது அவசியமெனத் தோற்றுகிறது. ஏனெனில், எனது இளைய நண்பர்களுக்குள் பலர் அறிந்தபடி இதுதான் என் நாடகங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும், எனக்குப் புகழைக் கொணர்ந்தது; அன்றியும் எனது மற்ற நாடகங்களைவிட, எல்லோராலும் அதிகமாய் ஆடப்பட்டது; என்னிடமிருக்கும் குறிப்பின்படி இந்நாடம் என் அனுமதியின் மீது 859 முறை இதுவரையில் ஆடப்பட்டிருக்கிறது; நேரில் அறியாத ஒரு விஷயத்தைப்பற்றி, ஒருவன் ஊகையினால் கூறக்கூடுமானால், ஏறக்குறைய அத்தனைமுறை என் அனுமதியின்றி ஆடியிருக்கவேண்டுமென்றும் நான் கூறலாம்.