பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

நாடக மேடை நினைவுகள்


மலத்தினால் புதைத்து வைக்கச் சொன்னாராம். பிறகு சில தினங்கள் கழித்து, மூடிய அக்குழியைத் தோண்டி வெண்கலப் பாத்திரத்தை எடுக்கச் செய்து, அதுகளிம்பு நீங்கிப்பிரகாசமாயிருப்பதைக் காட்ட, மந்திரியானவன், இதென்ன ஒரு புதுமையா? மலத்திலுள்ள புளிப்பு வெண்கலப் பாத்திரத்தின் களிம்பை நீக்கி விட்டது என்று கூற, உடனே சன்யாசி ‘மந்திரி அவர்களுக்கு மலத்தில் அதிகப் பரீட்சையிருக்கிறாற் போலிருக்கிறது. அந்த ருசி அறிந்திருக்க வேண்டும்’ என்று பதில் உரைத்தாராம் என்று கதையைக் கூறி முடித்தேன். ஆகவே ஒரு விஷயத்தைப்பற்றி அறிவதென்றால் சொந்த அனுபவத்தினால்தான் அறியக் கூடும் என்று நாம் கருதலாகாது. சுயானுபவம், அநேக மார்க்கங்களில் ஒன்றேயாம். புத்தி நுட்பமுடையவர்கள் மற்றவர்களுடைய அனுபவத்தைப் பற்றிப் பார்த்தும், கேட்டும் பல விஷயங்கள் அறியக் கூடுமன்றோ? அன்றியும் நமது அறிவைக் கொண்டு ஆராய்ந்து அநேக விஷயங்களை அறியலாமன்றோ? ஆகவே இச்சந்தர்ப்பத்தில், இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களுக்கு வற்புறுத்தும் சங்கதி என்னவென்றால், கிரந்த கர்த்தாக்கள் எழுதுவதெல்லாம் அவர்கள் சுயானுபவத்தைக் கொண்டே என்று என்ணுவது பெரும் தவறாகும் என்பதேயாம்.

மேற்கண்ட மனோஹரன் நாடகமானது என் சொந்தக் கற்பனைக் கதையடங்கியது என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். இக்கதை என் மனத்தில் எவ்வாறு முதல் முதல் உதித்தது என்பதை என் நண்பர்கள் அறிய விரும்புவார்களென நம்புகிறேன். அக்காலத்தில் நான் அடிக்கடி எனது நண்பராகிய ஸ்ரீனிவாச-ஐயங்காருடன் காலட்சேபங்களுக்குப் போவது வழக்கம். ஒரு நாள் மேற்சொன்னபடி ஒரு காலட்சேபத்துக்குப் போயிருந்தேன்; பாகவதர் (அந்தக பாகவதர், என்பது அவர் பெயரென நினைக்கிறேன். ஆயினும் இதை நான் நிச்சயமாய்ச் சொல்ல முடியாது) துருவ சரித்திரத்தை வெகு அழகாய்ச் சொன்னார். அக்கதையைச் சொல்லிக்கொண்டு வரும்பொழுது துருவன் தனது சிற்றன்னையால் அவமதிக்கப்பட்டபொழுது தன் தாயாரிடம் போய் முறையிட, அத் தாயார் துக்கப்பட்டதைக் கண்டு, தன் அவமானத்தையும் கருதாமல், தன் தாயார் துக்கப்