பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

நாடக மேடை நினைவுகள்


‘பத்மாவதி தேவி’யைக் கற்பனை செய்தேன். இவர்களுடைய குணாதிசயங்களைப்பற்றி வரைவதில், என் அருமைத் தாயாரின் குணங்கள் எனக்கு மிகவும் உபயோகப்பட்டன. மனோஹரன் தந்தை அரண்மனைத் தாசி ஒருத்தியின் வலையிலகப்பட்டது தவிர, மற்ற துர்க்குணங்கள் ஒன்றுமில்லாதவனாய், உத்தம புருஷனாயிருக்க வேண்டுமெனத் தீர்மானித்து, அவனுக்குப் புருஷோத்தமன் என்கிற பெயரையிட்டு சிருஷ்டித்தேன். வசந்தனைச் சிருஷ்டித்ததற்கு வேடிக்கையான காரணம் ஒன்று உண்டு. எனது நண்பனாகிய ச. ராஜகணபதி முதலியாரைப்பற்றி, இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு முன்னமே தெரிவித்திருக்கிறேன். அவர் என்னை அடிக்கடி “என்ன சம்பந்தம்? எப்பொழுது பார்த்தாலும் எனக்கு நல்ல வேஷம் கொடுப்பதில்லை. நல்ல ராஜா வேஷமாக ஒரு முறையாவது எனக்கு ஒன்றைக் கொடு” என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவர் மேடையின் மீது வந்தாலே எல்லோருக்கும் நகைப்பை விளைப்பார் என்று தெரிவித்திருக்கிறேன். இப்படிப்பட்டவருக்கு எப்படி ராஜா வேஷம் கொடுப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, வசந்தசேனையின் மகனை ஒரு பைத்தியக் காரனாக்கி அவ்வேஷம் இவருக்குக் கொடுத்தால் நலமாயிருக்குமெனத் தோன்றியது. இதுதான் வசந்தன் உற்பவித்ததற்குக் காரணம். மனோஹரன் நாடகத்தை வாசித்த நண்பர்கள், இவ்வசந்தன், வசந்தசேனைக்குக் கேசரிவர்மனால் பிறந்த பிள்ளை என்பதை நன்கு அறிவார்கள்.

ஆகவே, வாஸ்தவத்தில் வசந்தன் வேசி மகனாயிருக்க வசந்தசேனை மனோஹரனை வேசி மகன் என வைதது நாடக அலங்காரத்திற்கு மிகவும் பொருந்தியதாகும் என்பதைக் கவனிப்பார்களாக.

இனி விஜயாள் என்னும் நாடகப் பாத்திரத்தைப்பற்றி ஒரு விசேஷமுண்டு. அதாவது முதல் முதலில் மனோஹரன் கதையை நான் நிரூபணம் செய்தபொழுது, “விஜயாள்” என்னும் பாத்திரமே-இக்கதையில் கிடையாது! இந்நாடகக் கதையை எப்படி ஆரம்பித்து எப்படி முடிப்பது என்று முதல் முதல் நான் என் மனத்தில் திருப்பிக் கொண்டிருந்த பொழுது, என் தந்தையுடன் புதுக்கோட்டையில் ஒரு ஜமீன்தாருடைய