பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

133


கலியாணத்துக்காகப் போயிருந்தேன். அங்கு, இக் கதையை, இப்பொழுது அச்சிட்டிருக்கும் இரண்டாவது அங்கம் முதற் காட்சியில் ஆரம்பித்து, ஒருவாறாக முடிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அச்சமயம் நான் புருஷோத்தமனுடைய வேடம் தரிக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டேன். அதற்குத் தக்கபடி கதையின் அம்சங்களை யெல்லாம் யோசித்து வைத்தேன். ஒரு நாள் இரவு ஏதோ காரணத்தினால் எனக்கு நன்றாய்த் தூக்கம் வராமலிருந்த பொழுது, என் வழக்கப்படி, கதையின் காட்சிகளைப் பற்றி நான் பன்முறை யோசித்துக் கொண்டிருந்த பொழுது, திடீரென்று, புருஷோத் தமன் குமாரனாகிய மனோஹரன் வேடம்தான் நமக்கு நன்றாயிருக்குமென்று என் புத்தியிற்பட்டது. உடனே கதையின் போக்கை மாற்றி, இப்பொழுது அச்சிட்டிருக்கும் நான்கு காட்சிகள் அடங்கிய முதல் அங்கத்தைச் சேர்த்து, அதற்குத் தக்கபடி கதையின் போக்கை யெல்லாம் மாற்றினேன்! அன்றிரவு சற்றேறக்குறைய மூன்று மணிவரையில் இதனால் விழித்திருந்தேன் என்றே நான் கூற வேண்டும். எனக்குத் திருப்திகரமாய்க் கதையை விவரித்து முடிவு பெறச் செய்த பிறகுதான் தூங்கினேன்! இவ்வாறு மாற்றியதில் மனோஹரனுக்கு ஒரு மனையாளாக ஒரு பெண்மணியைச் சிருஷ்டித்தேன் அன்றிரவு.

மறுநாள் காலை நான் எழுந்தவுடன், இம் மனைவிக்கு என்ன பெயர் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது, என் அருமைத் தந்தையார், அக்காலத்தில் புதுக்கோட்டையில் வழங்கி வந்த வட்டமான சில காசுகளை என் கையில் கொடுத்து, இதைப் பார்த்திருக்கிறாயா என்று கேட்டார். இல்லை என்று அவருக்குப் பதில் சொல்லிவிட்டு, அக்காசுகளின் பேரில் செதுக்கியிருந்த எழுத்துகளை நோக்கினேன். “விஜய” என்று இருந்தது. உடனே அப்பெயர் சிறிதாயும் அழகாயும் இருக்கிறதென்று தீர்மானித்து அப்பெயரை மனோஹரன் மனைவிக்குக் கொடுக்கத் தீர்மானித்தேன். விஜயாள் பிறந்தது இவ்விதமாம்.

நான் எழுதும் நாடகங்களின் நாடகப் பாத்திரங்களுக்குச் சாதாரணமாக அவர்கள் குணத்திற்கேற்றபடி பெயர் வைப்பது வழக்கம். மனோஹரன் என்கிற பெயர் காலஞ்சென்ற ஆந்திர