பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

135


காரணம், அவர்களுடைய பெயர்களின் அர்த்தத்தை நோக்கினாலே தெரியும்.

இனி, என் வழக்கப்படி இந்நாடகத்தில் முக்கிய நாடகப் பாத்திரங்கள் எனது நண்பர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த விதத்தைப் பற்றி எழுதுகிறேன். புருஷோத்தமனுடைய வேடம், அதுவரையில் இதர நாடகங்களில் நன்றாய் நடித்துப் பெயர் பெற்ற ராஜரத்தின முதலியார் என்பவருக்குக் கொடுத்தேன்; சத்தியசீலரின் வேடம், எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்குக் கொடுத்தேன்; அ. கிருஷ்ணசாமி ஐயருக்குப் பத்மாவதியும், சி. ரங்கவடிவேலுக்கு விஜயாளும் கொடுக்கப்பட்டது; எம். துரைசாமி ஐய்யங்காருக்காக ராஜப்பிரியன் நாடகப் பாத்திரம் எழுதினேன்; ஆகவே அது அவருக்குக் கொடுக்கப்பட்டது. வசந்தசேனை வேடம், எம். கந்தசாமி முதலியாருக்குக் கொடுக்கப்பட்டது; வசந்தன் வேடம் எஸ். ராஜகணபதி முதலியார் பூண்டனர். நீலவேணி வேடம், பிறகு ஹைகோர்ட்டில், அபிஷல் ரெபரியாக (Official Referee) இருந்து அகஸ்மாத்தாய்க் குற்றால அருவியில் உயிரை இழந்த கே.செங்கல்வராயருக்குக் கொடுக்கப்பட்டது. காலஞ்சென்ற என் தமயனாகிய ஆறுமுக முதலியார் குருவேடம் புனைந்தனர்; ஜே.பி. ஷண்முகம் பிள்ளை விகடனாக நடிக்க ஒப்புக் கொண்டார். கேசரிவர்மன் பிசாசு என்னும் நாடகப் பாத்திரத்தை மற்றெவரும் எடுத்துக் கொள்ள ஆட்சேபணை செய்தபடியால், சாரங்கபாணி முதலியார் என்னும் ரங்கவடி வேலுவின் பள்ளிக்கூடத் தோழனை எடுத்துக்கொள்ளும்படி செய்தேன். அமிர்தகேசரி என்னும் வைத்தியன் வேஷம், வாஸ்தவத்தல் வைத்தியராக இருந்த வெங்கடகிருஷ்ணப் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டது.

இந்நாடகத்தை நான் காட்சிகாட்சியாக எழுதி முடிக்கும் பொழுதே, அவரவர்கள் அவர்களுடைய பாகத்தை எழுதிக் கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். இந்நாடகத்தை எழுதிய பொழுது நேர்ந்த ஒரு சம்பவத்தை இதை வாசிக்கும் என் நண்பர்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

என் தந்தை உயிருடன் இருக்கும் பொழுதே இந்நாடகத்தை எழுத ஆரம்பித்தேன் என்று முன்பே தெரிவித்திருக்