பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

137


மாட்டார்கள்” என்று தர்மராஜன் கூறிய வார்த்தையைக் கவனிப்பார்களாக.

இனி இம் மனோஹரன் நாடகத்தில் சில காட்சிகள் என் மனத்தில் உதித்ததற்குக் காரணத்தைக் கூறுகிறேன். இந்த நாடகத்தின் முதற் காட்சியானது விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடக மேடையொன்று பல வருஷங்களுக்கு முன், முதல் முதல் கட்டப்பட்ட பொழுது, அதில் டிராப்படுதாவில் எழுதப்பட்டிருந்த ஒரு காட்சியே. இது அநேக வருஷங்களுக்கு முன்னமே பழசாகப்போய்க் கிழிந்து போய்விட்டது. ஆயினும் முதல் முதல் அதை நான் பார்த்தபோது அக்காட்சி என் மனத்தை உருக்கியது. ஓர் ஏரியின் கரையில் ஒரு வாலிபனும் பெண்மணியும் நெருங்கி உட்கார்ந்திருந்தது போல் வரையப்பட்டிருந்தது.

அதை வரைந்த சித்திரக்காரர் என்ன எண்ணத்துடன் வரைந்தாரோ அறிகிலேன். ஆயினும் என் மனத்திற்கு அப்பெண்மணி ஏதோ துக்கப்படுவது போல் தோற்றியது. என்ன காரணம் பற்றியிருக்கலாமென்று நானாக யோசித்து, அருகிலிருக்கும் அவள் காதலன் ஐரோப்பா தேசத்தில் குரூசேட் (crusade) சண்டைக்குப் போகப் போகிறவன் புறப்படு முன், தன் காதலியிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு புறப்படுகிறான். அதற்காகக்தான் அப்பெண்மணிதன் காதலனை மறுபடியும் காண்போமோ என்னவோ என்னும் சங்கையினால் துக்கப்படுகிறாள், என்று என் மனத்தில் யோசித்துக் கொண்டேன். அப்படுதாவைப் பிறகு நான் பன்முறை பார்க்கும் பொழுதெல்லாம் இதே ஞாபகம்தான் எனக்கு வந்தது. மனோஹரன் நாடகத்தில் முதல் அங்கத்தில் முதற் காட்சியில் மனோஹரன் தன் தாயாரிடமும் மனைவியிடமும் யுத்தத்திற்குப் போகுமுன் விடை பெற்றுக் கொண்டு போகும் காட்சி, இதனின்றும் என் மனத்தில் உண்டாயதென்றே நான் சொல்லவேண்டும்.

மற்றொரு காட்சிக்குக் காரணம் சற்று நகைப்பை உண்டாக்குவதாயிருக்கும். சி. ரங்கவடிவேலு எனக்கு சிநேகிதனான பிறகு சைதாப்பேட்டையில் ஒரு நாள் எங்கள் சபையார் வனபோஜனத்துக்காகப் போயிருந்தபொழுது,