பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

நாடக மேடை நினைவுகள்


மாட்டேன் என்பது திண்ணம். இந்நாடகத்தை ஆட விரும்பும் அனைவர்க்கும், முக்கியமாக மனோஹரன் பாத்திரத்தை எடுத்துக் கொள்பவர்க்கெல்லாம், ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள அடியிற்கண்ட வார்த்தைகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவைகள்:- “நான் வகுத்த வண்ணம் உமது வசனங்களை நாவினால் நயம்பட வழங்கும்படி உம்மை வேண்டுகிறேன். உங்களுள் அநேகர் உரைப்பதுபோல அவ்வசனங்களை வாய்விட்டுக் கத்துவீராயின், அதைவிடப் பட்டணங்களில் பறை சாற்றும் வெட்டியானைக் கொண்டு, நான் வரைந்ததைப் பகர்ந்திடச் செய்ய நான் விரும்புவேன்..... இடிபோல் முழங்கி, சண்டமாருதமெனவரும் உமது ரௌத்திரம் முதலிய ஆவேசங்களிலும் ஒருவித அடக்கத்தை வகித்தவராய், அத்து மீறாது ஒழுங்கினை உடையவரா யிருத்தல் வேண்டும். அர்த்தமில்லா அபிநயங்களையும் ஆரவாரக் கூச்சல்களையுமே அதிகமாய் விரும்பும் அற்ப ஜனங்களின் காதுகள் பிளந்து போகும்படி கத்துவதைக் காணுங்கால், என் மனமெல்லாம் புண்படுகின்றது. இராட்சதர் களைத் தோற்கடிக்கச் செய்யும் அப்படிப்பட்ட ஒருவனைத் துடைப்பத்தால் அடித்துத் துரத்த விரும்புவேன் நான். .......உம்மை வேண்டுகிறேன், இதை விட்டொழியும்.... அத்துமீறிப் போவது நாடகமாடுவதன் தாத்பர்யத்துக்கு முற்றிலும் விருத்தமாகும்” என்பனவேயாம். இவ்வார்த்தை களைச் சற்று நான் விவர்மாய் வரைந்ததற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. இம் மனோஹரன் பாத்திரத்தை ஆடும் ஆக்டர்கள் பெரும்பாலும் ஷேகஸ்பியர் மகா நாடகக் கவி, எக்குற்றங்களை யெல்லாம் களைய வேண்டுமென்று போதித்திருக்கின்றாரோ, அக்குற்றங்களையெல்லாம் உடையவர்களாயிருப்பதே. அக்குற்றங்களை யெல்லாம் நீக்கி ஆடாமையே, அவர்கள் இப் பாத்திரத்தில் பெயர் பெறாமைக்குக் காரணம் என்று உறுதியாய் நம்பி, சரியான வழியில் இதை ஆடுவார்களென்று விரும்பியே இதை எழுதலானேன். முக்கியமான இக்காட்சியில் மனோஹரனாக நடிக்கும் பாத்திரம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இதைப் பார்க்கும் ஜனங்கள், மனோஹரனுடைய முழு தேக பலத்தையும் நாம் கண்டு விட்டோம் என்னும் யோசனையை அடையச் செய்யலாகாது என்பதேயாம்.