பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

நாடக மேடை நினைவுகள்


பதங்களைச்சொல்லும் பொழுது, விஜயாளின்பேதைமையையும் கணவன் மீதுள்ள காதலையும், சிறு கோபத்தையும் என்ன அழகாகத் தெரியப்படுத்தினார் என்பது அவர் அவ்வார்த்தைகளைக் கூறக் கேட்டவர்களுக்குத்தான் தெரியும். அவருக்குப் பின் விஜயாளாக நடித்த (ஏறக்குறைய ஒருவர் தவிர) மற்றெல்லா ஆக்டர்களும் அதிக கோபத்தையோ, அதிக ஊடலையோ, அதிக அவநம்பிக்கையையோ அல்லது மேற்சொன்ன பாகங்களையெல்லாம் குறைவாகவோ காண்பித்தார்களே யொழிய, பாத்திரத்திற்குத் தக்கபடியான பக்குவத்துடன் பகர்ந்திலர் என்பது என் துணிபு. இந்தக் கட்டத்தில் சாதாரண ஆக்டர்கள் இழைக்கும் பிழையாவது, கோபத்தை அதிகப்படுத்தி அபிநயிப்பதேயாம். இதற்கு ஆங்கிலத்தில் ஓவர் ஆக்டிங் (Over acting) என்று சொல்லுவார்கள்.

இவர் அன்று விஜயாளாக நடித்ததில் என் மனத்தில் முக்கியமாகப்பட்ட மற்றொரு விஷயத்தை எழுத விரும்புகிறேன். இந்நாடகத்தில் நான்காவது அங்கத்தில் புருஷோத்தமன், நடந்த உண்மையையறிந்து பத்மாவதியிடம் சென்று மன்னிப்புக் கேட்கும் சந்தர்ப்பத்தில் திரைக்கு வெளியில் வந்து, தன்னுடன் பேசிய தன் மருமகளாகிய விஜயாளைப் பார்த்து, தான் அவளது கணவனுக்கு இழைத்த பெரும் தீங்கையெல்லாம் மன்னிக்கும்படியாகக் கேட்கும் பொழுது, விஜயாள், “சரிதான் மாமா” என்று பதில் சொல்லுகிறாள்; இவ்வார்த்தைகளை நான் எழுதியபொழுது, விஜயாள் தன் மாமனாரை எளிதில் மன்னித்திருக்க வேண்டும் என்று கருதி எழுதினேன்; அவ்வளவுதான். அந்த இரண்டு பதங்களை என் நண்பர் சி. ரங்கவடிவேலு அற்றைத் தினம் இந்நாடகம் முதன் முறை நடந்தபொழுது, தக்கபடி உச்சரிக்கக் கேட்ட பிறகுதான், அந்த இரண்டு பதங்களில் எவ்வளவு அர்த்தம் அடங்கியிருக்கிறதெனும் உண்மையை, நூலாசிரியனாகிய நானே உணர்ந்தேன்! நான் பல வடருஷங்களுக்குமுன் படித்த ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் எனக்கு இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது. அதன் தாத்பர்யம் என்னவென்றால். ஒரு குளத்தை வெட்டினவன், அதன் சுகத்தை அறிந்திலன்; வெயிலிலடிபட்டு வேட்கையுடன் வந்து, அக்குளத்திலிறங்கி,